Published : 05 Feb 2023 05:35 AM
Last Updated : 05 Feb 2023 05:35 AM
வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
பிரதமர் மோடி: திறமையான வாணி ஜெயராம் ஜி, பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் அவரது இனிமையான குரல் மற்றும் செழுமையான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு கலையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: வாணி ஜெயராமின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த வாணி ஜெயராமுக்கு அண்மையில் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்து கவுரவித்தது. அவரது இழப்பு இசைத்துறைக்கும்,ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அண்மையில் அவருக்கு ‘பத்மபூஷண்’ விருது அறிவிக்கப்பட்ட போது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை: ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராமின் மறைவுச் செய்தி மனத்துயர் அளித்தது. இந்தியாவின் இதய கமலமாக, பத்மபூஷன் என்று வாழும் காலத்தில் விருது வழங்கிக் கொண்டாடப்பட்ட அவரின் இழப்பு இசை உலகின் பேரிழப்பு.
எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: 3 முறை தேசிய விருதை பெற்ற பத்ம பூஷன் வாணி ஜெயராம் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
கமல்ஹாசன்: வார்த்தை களுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.
டி.ராஜேந்தர்: ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல் மூலம் தமிழ் திரை உலகத்தையே மயங்க வைத்தவர், திரும்பி பார்க்க வைத்தவர், பலமுறை இந்தப் பாடலை விரும்பி கேட்க வைத்தவர். இசை உலகத்தின் இசைவாணி, இந்திய திரையுலகத்தின் கலைவேணி, பாடகி வாணி ஜெயராம் மறைவு அதிர்ச்சி அளித்தது.
பாடகி கே.எஸ். சித்ரா: இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரிடம் பேசினேன். வலுவான கிளாசிக்கல் அடித்தளத்துடன் கூடிய பல்துறை மற்றும் பன்மொழி பாடகி.
குஷ்பு: நாம் இன்னும் ஒரு நவரத்தினத்தை இழந்துவிட்டோம். பல ஆண்டுளாக நம்மைக் கவர்ந்த ஒரு குரல் நம்மை மனவேதனைக்கு உள்ளாக்கிவிட்டது. அவருடைய இனிமையான மற்றும் மென்மையான இயல்பு அவருடைய குரலில் தெளிவாகத் தெரிந்தது. நீங்கள் என்றும் நினைவில் இருப்பீர்கள் அம்மா.
ராதிகா சரத்குமார்: நேற்றிரவு அவரது பாடலைக் கேட்டுவிட்டு, அதை, கே.விஸ்வநாத் சார் படத்தில் எவ்வளவு அழகாக படமாக்கி இருக்கிறார் என்று என் கணவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.
சுஹாசினி: என்ன ஒரு இனிமையான குரல். நாங்கள் கடைசியாக சந்தித்தபோது அவர் குரல் தெளிவாக இருந்தது. ஏழு ஸ்வரங்கள், மல்லிகை, நானே நானா, நான் நடித்த மேகமே மேகமே பாடல்களை எங்கள் மனதில் இருந்து நீக்க முடியவிலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT