Published : 05 Feb 2023 04:00 AM
Last Updated : 05 Feb 2023 04:00 AM
சென்னை: அமெரிக்காவில் பலருக்கும் பார்வை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள குளோபல் பார்மா நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள், விசாரணை முடியும் வரை கண் தொடர்பான மருந்துகளை உற்பத்தி செய்ய அந்த நிறுவனத்துக்கு தடை விதித்துள்ளனர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு, திருப்போரூரில் செயல்பட்டு வருகிறது குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரித்த சில கண் மருந்துகளால் அமெரிக்கர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்படுவதாக, அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு குற்றம் சாட்டியது. மேலும், ஒருவர் இறந்துவிட்டதாகவும் கூறப் படுகிறது.
இதையடுத்து, அமெரிக்க நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், குளோபல் பார்மாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்து, அந்த நிறுவனத்தின் மருந்துகளை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு: இந்த நிறுவனத்தின் மருந்துகள்இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவில்லை. அதே நேரம், அமெரிக்காவில் சந்தைப் படுத்தப்பட்ட, அந்த நிறுவனத்தின் மருந்துகளை திரும்பப் பெறுவதாக குளோபல் பார்மா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தாமாக முன்வந்து மருந்து தயாரிக்கும் பணியை அந்த நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, திருப்போரூரில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தொழிற்சாலையில் இருந்த மூலப் பொருட்கள் மற்றும் அங்கிருந்த மருந்துகளின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் விஜயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அச்சம் வேண்டாம் - குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள், இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவில்லை. எனவே, தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாதிரிகளை சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை சமர்ப்பிப்பு: அமெரிக்கா நோய் கட்டுப்பாடுமற்றும் தடுப்பு மையம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை, இதுவரை வெளியிடவில்லை.
எங்களது சோதனை முடிவுகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம். அதேநேரம், மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் சோதனை முடிவுகள் வந்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமெரிக்காவில் ஒருவர் இறந்ததாக கூறப்படுவது உறுதியாகவில்லை.
எனினும், விசாரணை முழுமையாக முடியும்வரை, குளோபல் பார்மா நிறுவனத்தில், கண் தொடர்பான மருந்துகளை உற்பத்தி செய்யக் கூடாது என்று உத்தர விட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, திருப்போரூரில் உள்ள குளோபல் பார்மா நிறுவனத்தின் தொழிற்சாலையில் மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT