Published : 05 Feb 2023 04:15 AM
Last Updated : 05 Feb 2023 04:15 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே எருதாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காளைக்குப் பதிலாக ஊர்த் தலைவரின் இடுப்பில் கயிறைக் கட்டி அங்கும், இங்கும் இழுத்து இளைஞர்கள் விளையாடி, அம்மனை வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி எருது விடும் விழா, எருதாட்டம் ஆகியவை நடைபெறுவது வழக்கம். இதில், எருதாட்டம் என்பது பொங்கலைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி.
இதில், கிராமத்தில் உள்ள பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோயிலில் காளைகளை அழைத்துச் சென்று பூஜைகள் செய்து, ஊரில் உள்ள பொது மைதானத்துக்குக் காளைகள் அழைத்து வந்து, காளையின் இருபுறமும் வடக்கயிறு கட்டி, காளைகளின் முன்பு பொம்மைகளைக் காட்டி காளைகளை உற்சாகப்படுத்தி இளைஞர்கள் விளையாடுவார்கள்.
இந்த எருதாட்டம் பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ் குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் மாரியம்மன் கோயில் தைத் திருவிழாவையொட்டி, எருதாட்டம் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் காவல்துறையினர் எருதாட்டத்துக்கு அனுமதி கொடுக்காமல் தடை விதித்தனர். இதனால், கிராம மக்கள் ஒன்றிணைந்து காளைக்குப் பதிலாக, ஊர்த் தலைவரின் இடுப்பில் கயிறைக் கட்டி கோயிலை வலம் வந்து அம்மனுக்குப் பூஜை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி, ஊர்த் தலைவர் சசியின் இடுப்பில் கயிறைக் கட்டி இளைஞர்கள் இருபுறமும் இழுத்து பூஜைகள் செய்து, கோயிலை வலம் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
காவல் துறைக்குப் புரிதல் இல்லை - இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: காவல் துறையினருக்கு எருது விடும் விழாவுக்கும், எருதாட்டத்துக்கும் சரியான புரிதல் இல்லை. எருதாட்டத்தில் தொடர்புடைய கிராம மக்கள் மட்டுமே பங்கேற்று, காளைகளுக்கு விளையாட்டு காட்டுவோம்.
இதில், காளைகளை ஓடவிடுவதில்லை. இதை அறியாமல் பாரூர் போலீஸார் விழாவுக்கு தடை விதித்தனர். பாரம்பரியமாக நடத்தப்படும் எருதாட்டம் நடத்தவில்லை என்றால் ஊருக்கு தீங்கு ஏற்படும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. எனவே, ஊர் தலைவர் மூலம் வழக்கமான பூஜைகளைச் செய்து வழிபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT