Published : 05 Feb 2023 04:20 AM
Last Updated : 05 Feb 2023 04:20 AM
மதுரை: மதுரையில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு ரூ.180 கோடி கடனுதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை வழங்குகிறார் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரையில் நாளை அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி உதவித்தொகையை வழங்குகிறார். இதற்காக மதுரை சுற்றுச்சாலையில் வண்டியூர் அருகே மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியும், பல்லாயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதியையும் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி, ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 75 ஆயிரம் பேருக்கு ரூ.180 கோடி கடனுதவியை அமைச்சர் உதயநிதி வழங்க உள்ளார். மேலும் பல்வேறு திட்டங்களில் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க இன்று மதுரை வரும் அமைச்சர் உதயநிதியை மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட திமுகவினர் விமான நிலையத்தில் வரவேற்கின்றனர் என்று கூறினார்.
போக்குவரத்து மாற்றம்: இவ்விழாவையொட்டி மதுரை சுற்றுச்சாலை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. விழாவில் பங்கேற்போரை அழைத்துவரும் வாகனங்கள் மட்டுமே விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பிலிருந்து கருப்பாயூரணி சந்திப்பு வரை உள்ள சாலையில் அனுமதிக்கப்படும்.
மாட்டுத் தாவணியிலிருந்து வரும் வாகனங்கள் கருப்பாயூரணி, சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூர் சந்திப்புக்குச் செல்ல வேண்டும். தென்பகுதியிலிருந்து மதுரை வரும் வாகனங்கள் விரகனூர் சந்திப்பிலிருந்து வைகை தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை, கே.கே. நகர் வழியாக மாட்டுத்தாவணி செல்ல வேண்டும்.
திருமங்கலம் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி செல்லும் சரக்கு வாகனங்கள் கப்பலூரிலிருந்து சுற்றுச்சாலை வழியாக சமயநல்லூர், வாடிப்பட்டி, திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சி செல்ல வேண்டும். மேலூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சந்திப்பை அடைந்து வழக்கம்போல் செல்லலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT