Last Updated : 05 Feb, 2023 04:25 AM

 

Published : 05 Feb 2023 04:25 AM
Last Updated : 05 Feb 2023 04:25 AM

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரம்: விக்டோரியா கவுரிக்கு ஆதரவாக மதுரை வழக்கறிஞர்கள் கடிதம்

மதுரை: உயர் நீதிமன்றக் கிளை உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்குமாறு உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு மதுரை வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணிபுரிபவர் விக்டோரியா கவுரி. இவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வைகை, என்ஜிஆர் பிரசாத், சுதா ராமலிங்கம் உட்பட 21 பேர் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்தக் கடிதத்தில், விக்டோரியா கவுரி உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பாஜக தேசிய மகளிரணி பொதுச் செயலாளராக பணிபுரிந்தார். அப்போது அவர் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசியுள்ளார். இதனால், அவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்குமாறு உச்ச நீதிமன்ற கொலீஜிய நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அனுப்பியுள்ள கடித விவரம்: வழக்கறிஞர்கள் பெரும்பாலானோர் நேரடியாக அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் செயல்படுகின்றனர். அரசியல் கட்சிகளில் இருந்த வழக்கறிஞர்கள் பலர் நாடு முழுவதும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முன்னணி கட்சிகளில் மாவட்டச் செயலாளர்களாகவும், பிற பதவிகளிலும் இருந்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட பிறகு பாரபட்சமின்றி சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரியின் முந்தைய அரசியல் தொடர்பை வைத்து அவர் நீதிபதி பதவிக்குத் தகுதியானவர் இல்லை என சில வழக்கறிஞர்கள் கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு பிரிவு போலீஸார், நுண்ணறிவுப் பிரிவு தகவல் அடிப்படையில், அவரை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. அப்படியிருக்கும்போது, அரசியல் உள்நோக்கத்துடன் நீதித் துறை நிர்வாகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. என விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடித விவரம்: உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி, கிறிஸ்தவர், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல. அவர் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இரு தனி நபர் இடையிலான உண்மையான காதலை எதிர்க்கவில்லை.

போலி காதல் அடிப்படையில் மதமாற்றம் நடைபெறக் கூடாது என்றுதான் கருத்து தெரிவித்துள்ளார். ஆகவே எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் அவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x