Published : 05 Feb 2023 04:30 AM
Last Updated : 05 Feb 2023 04:30 AM

இலங்கை பொருளாதார நெருக்கடி - மேலும் 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேசுவரம்: இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். அதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக தினேஷ் குணவர்தனவும் பதவி வகித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 219 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டம் பெருங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெய பரமேசுவரன் (43) அவரது மனைவி வேலு மாலினி, தேவி(43) மகள் தமிழினி(12), மகன் மாதவன் (7) ஆகியோர் தனுஷ்கோடி அருகே ஒத்தப்பட்டி கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வந்திறங்கிஉள்ளனர்.

தகவல் அறிந்து மெரைன் போலீஸார் அங்கிருந்து மண்டபம் மெரைன் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால், குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு குடும்பத்துடன் புகலிடம் தேடி வந்ததாக தெரிவித்துள்ளனர்.

4 இலங்கை தமிழர்களும் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் சேர்க்கப்பட்டனர். இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து தனுஷ்கோடிக்கு அடைக்கலம் தேடி வருவோரை அகதியாக அங்கீகரிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்ததாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x