

மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 38 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 71 அடியை கடந்துள்ளது.
கர்நாடாகாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணைக்கு 36,772 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சனிக்கிழமை காலை அணையின் நீர் மட்டம் 71.05 அடியாக இருந்தது.
அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 33.60 டிஎம்சி. கடந்த 9 நாட்களில் அணையின் நீர்மட்டம் 23.11 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் டெல்டா பாசனத்துக்காக விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிலிகுண்டுலுவில் நேற்று முன் தினம் 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று 39,200 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.