

கடந்த 3 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மகத்தான சாதனைகள் படைத்துள்ளது என்று மத்திய செய்தி ஒளிபரப்பு மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச் சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை அகில இந்திய வானொலி அலுவ லக வளாகத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
நரேந்திர மோடி தலைமையி லான பாஜக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த 3 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன. அதன் மூலம் மக்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர்.
‘குறைந்த நிர்வாகம் சிறந்த ஆட்சி’ என்ற தாரக மந்திரத்துடன் மோடியின் அரசு தனது பணிகளைத் தொடங்கியது. இந்த 3 ஆண்டுகளில் எங்களது லட்சியங்கள் பலவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். ‘மனதின் குரல்’ என்ற பெயரில் பிரதமர் மோடி வானொலியில் ஆற்றிய உரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசின் திட்டங்கள், நோக்கங்களை மக்களுக்கு அவர் கொண்டுச் சென்றுள்ளார்.
தமிழகத்தில் செய்தி ஒளிபரப்பு துறையின் செயல்பாடுகள் பற்றி இன்று ஆய்வு நடத்தினேன். மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் செய்தி ஒளிபரப்புத் துறை முக்கியப் பங்காற்றியுள்ளது. தூர்தர்ஷன் தொலைக்காட்சி நவீனப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி ஒளிபரப்புத் துறை மூலம் ஊடகத் துறையின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பத்திரிகை ஆசியர்கள் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சமூக வானொலிகளுக்கான மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு மகத்தான சாதனைகளை படைத்துள்ளது. மக்களின் மேம்பாட்டுக்காக எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.