மின் விநியோகம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவும் வதந்தி: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம்

மின் விநியோகம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பரவும் வதந்தி: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம்
Updated on
2 min read

தமிழகத்தில் மின் விநியோகம் தொடர்பாக, சமூக வலைதளத்தில் மின்வெட்டு அறிக்கை போன்று தற்போது வதந்தி பரப்பப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "

தமிழகத்தின் தற்போதைய பூர்த்தி செய்யப்பட்ட மின்தேவை நாள் ஒன்றுக்கு 15,000 மெகாவாட்டாக உள்ளது. இதனை ஈடுசெய்ய மின்கையிருப்பின் அளவு 17,400 மெகாவாட்டாக உள்ளது. மேலும், காற்றாலை மூலம் 2,000 முதல் 3,000 மெகாவாட் மின் உற்பத்தியும் மற்றும் பகல் நேரங்களில் சூரியஒளி மின் உற்பத்தி மூலம் சுமார் 1,300 மெகாவாட் வரையும் மின் உற்பத்தி உள்ளது. எனவே, தற்பொழுது தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை. மேலும், காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், மின் கையிருப்பின் அளவு மின் தேவையின் அளவை விட அதிகமாகவே உள்ளது.

எனவே தமிழகத்தில் மின்வெட்டு அறிக்கை போன்று சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டுவரும் வதந்தியை பொது மக்கள் நம்பவேண்டாம். தற்பொழுது தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை.

காற்றாழை மின்னுற்பத்தி அதிகரிப்பு

காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களின் தேவைகேற்ப ரூ.4.10/யூனிட் வீதம் மின் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கோடைக்காலத்தில் அதிக மின் தேவை நிலைமையை எதிர்கொள்ள மின் விநியோகம், மின் உற்பத்தி, மின் இயக்கம் மற்றும் மின்திட்ட உயர் அதிகாரிகளுடன் கடந்த 21.4.2017 முதல் 26.04.2017 வரை துறை வாரியாக மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

26.04.2017 அன்று இரவு சுமார் 9.45 மணி அளவில் காற்று திசையின் மாற்றம் காரணமாக வடசென்னையிலுள்ள உயரழுத்த மின்தொடர் கம்பிகளில் சிமெண்ட் மற்றும் இராசயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு மற்றும் மாசு படிவதால் மின் கடத்திகளில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டு மின் உற்பத்தியிலும் இழப்பு ஏற்பட்டது.

மின்துறை அமைச்சர் அவர்கள் உடனே தலைமை அலுவலகத்திலுள்ள மின்கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்து சென்று உயர் அதிகாரிகளுடன் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். அதன்படி 200-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மின் பாதையை இரவோடு இரவாக பல திசைகளில் கள ஆய்வு மேற்கொண்டு பழுதுகளை சரி செய்து படிப்படியாக மின்சாரம் சீரமைக்கப்பட்டு சுமார் அதிகாலை 3.00 மணி அளவில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது.

கோடைக்கால மின்நிலைமையை எதிர்கொள்ள பிப்ரவரி 2017 முதல் மே 15, 2017 வரை 1,022 மெகாவாட் அளவிற்கு குறைந்தகால நுழைஉரிமை மூலம் மின்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மின் உற்பத்தி நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டால் மின் சந்தையில் 1,000 மெகாவாட் வரை மிகமலிவான விலையில் (யூனிட் ஒன்றிற்கு ரூபாய் 2.92 முதல் 3.95 வரை) மின்சாரம் தினசரி கொள்முதல் செய்ய வழிவகை உள்ளது.

கோடையின் தாக்கம் முன் எப்போதும் விட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மிக அதிகமாகவே உள்ளது. இதனால் மின் உபகரணங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டு தற்காலிக மின்தடை ஏற்படுகிறது. இருப்பினும் மிகக் குறுகிய நேரத்தில் சரி செய்யப்பட்டு உடனுக்குடன் மின் சீரமைப்பு செய்யப்படுகிறது. மேலும் மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய அதிகாரிகளும் மற்றும் களப் பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in