Published : 04 Feb 2023 12:54 PM
Last Updated : 04 Feb 2023 12:54 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | இபிஎஸ் தரப்பு வேட்பாளரை ஆதரிக்க ஓபிஎஸ்ஸிடம் வலியுறுத்தினோம்: அண்ணாமலை விளக்கம்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: "இபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஏற்கெனவே இரண்டுமுறை அங்கு எம்எல்ஏவாக இருந்த வேட்பாளர், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு நம்முடைய ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை, வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்புகூட தொலைபேசியில் என்னை அழைத்து 31-ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன். அதன்பிறகு வேட்பாளரை அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு அதன்படியே அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வமும்கூட, இபிஎஸ் வேட்பாளரை அறிவித்துவிட்டார் எனவே நானும் வேட்பாளரை அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டு அவரும் வேட்பாளரை அறிவித்தார்.

இதில் பாஜகவின் நிலைப்பாடு என்னவென்றால், கூட்டணிக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையில் எப்போதுமே தலையிடமாட்டோம் என்பது எப்போதுமே உறுதியான நிலைப்பாடாக இருந்து வருகிறது. இவை அனைத்தையும் பொருமையாக பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும், வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும், வலிமையான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற எங்களது நிலைப்பாட்டில் துளிகூட சந்தேகமின்றி பயணிக்கிறோம். அதனால்தான், பாஜக தேசிய தலைவர் அறிவுறுத்தலின்படி, மேலிட பொறுப்பாளர் தலைமையில் இருவரையும் சந்தித்தோம். அப்போது ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும், அவருக்கு எங்களுடைய முழு ஆதரவையும் கொடுத்து உழைக்க தயார் எனவும், அந்த வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நிறுத்த வேண்டும் அப்போதுதான் வெற்றிவாய்ப்பு பிரகாசம். நிச்சயமாகவே நமக்கு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், சின்னம் என்பது கூடுதல் பலம்.

எனவே ஓ.பன்னீர்செல்வம் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தோம். கட்சியின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக இடைத்தேர்தல் என்பது முக்கியமான தேர்தல். எனவே ஓபிஎஸ் அவர்கள் நம் அனைவரோடும் இன்னும் அதிகமாக இணைந்து செயல்பட வேண்டும்.

இபிஎஸ் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஏற்கெனவே இரண்டுமுறை அங்கு எம்எல்ஏவாக இருந்த வேட்பாளர், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு நம்முடைய ஆதரவைக் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறோம். அவரும் தனது தரப்பு கருத்துகளை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.

எங்களுடைய ஒரே நோக்கம், ஒரு வேட்பாளர். குறிப்பாக இரட்டை இலை சின்னத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும். அந்த வேட்பாளரின் வெற்றிக்கு பாஜக உறுதியாக பாடுபடும் என்ற உறுதிமொழியை இருவரிடமும் நேற்று கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x