

உதவித் தொகை பெற தகுதியில்லாத முதியோர்களுக்கு அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் வருவாய்த்துறை சார்பில் அனைத்து மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியர்கள் கூட்டம் நேற்று தொடங்கியது. அதேபோல, மாவட்ட வருவாய் அலுவலர்கள் 2 நாள் ஆய்வுக் கூட்டமும் நேற்று தொடங்கியது. இக்கூட்டங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், வருவாய்த் துறை செயலர் பி.சந்திரமோகன் ஆகியோர் பங் கேற்றனர். கூட்டம் தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்ய கோபால், ‘‘தமிழகத்தில் 29 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஓய்வூதியம் மற்றும் அரசின் உதவித் தொகை பெறுகின்றனர். ஓய்வூதியம் தொடர்பாக அம்மா திட்ட முகாம்களுக்கு முதியவர்கள் வரும்போது, அங்கு கண்புரை பரிசோதனைக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. கண்புரை இருப்பதாக தெரியவந்தால், தொடர்ந்து அறுவை சிகிச்சையும் அவர்களுக்கு மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, முழு உடல் பரிசோதனைக்கான சிறப்பு முகாமும் நடத்தப் படுகிறது’’ என்றார்.
கூட்டத்தை தொடங்கி வைத்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
மாவட்ட வருவாய் அலுவலர் களின் 2 நாள் ஆய்வுக் கூட்டம்நடக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே, அவர் உத்தரவின்படி நில சீர்திருத்தத் துறையின் கீழ் நிலங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டன. இவ்வாறு மறு சீரமைப்பு நடந்தபின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நடைமுறைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படு
கிறது. நிலம் மறுசீரமைக்கப்பட்ட பின் உபரியாக இருக்கும் நிலங்கள் கண்டறியப்பட்டு அவை பள்ளி, மருத்துவமனை, தொழிற்சாலைகளுக்காக எடுத்து தரப்படுகிறது.
சமூக பாதுகாப்பு திட்டத்தில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒருவேளை தகுதியில் லாதவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஏன் வழங்கப்பட வில்லை என்ற காரணத்தை எழுத்துப்பூர்வமாக அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வறட்சி பாதிப்பை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 100 சதவீதம் நிவாரணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.