Published : 04 Feb 2023 06:04 AM
Last Updated : 04 Feb 2023 06:04 AM
கோவை: கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் மாநகர போலீஸார் விசாரித்து 5 பேரை கைது செய்தனர். உயிரிழந்த முபின், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டதும், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு எண்ணத்தில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது.
பின்னர், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து, அவர்கள் சதித் திட்டம் தீட்டிய இடங்களுக்கு அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களை தொகுத்து, அனைத்தையும் ஆவணங்களாக தயார் செய்யும் பணியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT