

சென்னை: வழிப்பறி கொள்ளையை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக குற்றப் பின்னணிகொண்ட 403 பேரின் வீடு தேடிச் சென்று போலீஸார் தணிக்கை மேற்கொண்டனர்.
சென்னையில் அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வழிப்பறி கொள்ளையைத் தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் சென்னை போலீஸார் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு எதிரான ஒருநாள் சிறப்புத் தணிக்கை மேற்கொண்டனர்.
இந்த சிறப்புத் தணிக்கையில் குற்ற வழக்கு பின்னணி கொண்ட 403 பேரின் வீடு தேடிச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு தணிக்கை செய்தனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
வழிப்பறி குற்ற வழக்குகள் தொடர்பாக 316 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 15 பேரிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணைப் பத்திரம் பெறப்பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறுகையில், ``குற்றப் பின்னணி கொண்டோர் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருவதுடன், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.