

சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட்டப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்த முதல்வர் பழனிசாமி, நேற்றிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் (ஜூன்) கூட்டப்படும். அப்போது மாநில ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அவர்களும் நிதி ஒதுக்கீடு செய்தனர்.
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வங்கிகள் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் விவசாயிகளுக்கு நிதியுதவி பெற்றுத் தரப்படும்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.