

மதுபானக் கடைகள் அமைப்பது தொடர்பான கொள்கை முடிவுகளைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளை கிராமப்புறங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மதுபானக் கடைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்,கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குடியிருப்பு பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது,
கிராமசபைகளில் மதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் அந்த கிராமங்களி்ல் மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது என தடை விதித்தும், மதுவுக்கு எதிராக அறவழியில் போராடி வருபவர்களைக் கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். இந்த தடையை நீக்க வலியுறுத்தி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை கால நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.எம்.சுப்ர மணியம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை கூடுதல் வழக் கறிஞர் வெங்கட்ரமணி, “தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை இட மாற்றம் செய்வதை எதிர்த்து வெறும் 12 வழக்குகள் மட்டுமே தொடரப் பட்டுள்ளன.
இந்த வழக்குகளும் அரசியல் ரீதியாக தாக்கல் செய்யப் பட்டுள்ளன. மதுக்கடைகளுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடந்தால் அதற்கு அரசு எந்த இடை யூறும் செய்யாது. ஆனால் அதேநேரம் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக் கும் இடையூறு ஏற்படும் வகையில் போராடினால், அதை சட்டவிதிகளுக்கு உட்பட்டு காவல்துறை தடுக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டே டாஸ்மாக் மதுபானக் கடைகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. கண்டிப்பாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் மதுபானக் கடைகளை அமைக்க மாட்டோம். இதை அரசு தரப்பு உத்தரவாதமாகவே எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘அரசு சார்பில் அளிக்கப்படும் வாய்மொழி உத்தர வாதங்களை நம்ப முடியாது. இங்கு உறுதி அளித்துவிட்டு மறுநாளே இஷ்டத்துக்கு மதுக்கடைகளைத் திறக்கின்றனர். எனவே மதுபானக் கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கூடாது’’ என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘குடியிருப் புகள் மற்றும் கிராமப்புறங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கும் அரசின் கொள்கை முடிவை எதிர்த்து தினந்தோறும் பொதுமக்கள் போராடி வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ஜனநாயகம். எனவே பொதுமக்களின் எதிர்ப்புக்கு அரசு கண்டிப்பாக மதிப் பளிக்க வேண்டும். எனவே கூடுதலாக மதுபானக் கடைகள் அமைக்கும் அரசின் கொள்கைகளையும், அதுசார்ந்த முடிவுகளையும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற விதிகளையும் அரசு கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது’’ என கருத்து தெரிவித்தனர்.