

தாம்பரம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடைக்கு தீ வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 23 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை தாம்பரம் - சோமங்கலம் சாலை பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடை நீதிமன்ற உத்தரவுப் படி அகற்றப்பட்டது. நெடுஞ்சாலை யில் இருந்து அகற்றப்பட்ட கடையை மீண்டும் குடியிருப்புப் பகுதியில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடை திறக்கப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் அந்த டாஸ் மாக் கடையில் இருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு கடைக்கு தீ வைத்தனர். இது தொடர்பாக பீர்க் கன்காரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, தாம்பரம் தொகுதி செயலாளர் ரஞ்சன் உட்பட 23 பேரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் தீயில் எரிந்து நாசமாகின.