Published : 03 Feb 2023 10:55 PM
Last Updated : 03 Feb 2023 10:55 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அதிமுகவில் தொடரும் சலசலப்புகள்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என்றும், பொதுக்குழு முடிவை அக்கட்சியின் அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கவ வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் அதற்கு முன்பின் ஏற்பட்ட சலசலப்புகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஓபிஎஸ்-இபிஎஸ் உடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு: டெல்லி சென்று திரும்பிய நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஇபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்தித்தார். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மூத்த தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாஜகவிடம் எச்சரிக்கையாக உள்ளோம்... இந்த சந்திப்பின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், "பாஜக வட மாநிலங்களில் எப்படிபட்ட செயல்பாடுகளை எல்லாம் செய்தது. பாஜகவின் நட்பு ஆட்சிகள் எப்படி எல்லாம் கவிழ்ந்தன. அந்த ஆட்சியை எப்படி பாஜக பிடித்தது என்பது எங்களுக்கும் தெரியும்… மக்களுக்கும் தெரியும்… உங்களுக்கும் தெரியும்… எனவே நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக தான் நின்றது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். இதன் காரணமாக பாஜக எங்களுடன் பணியாற்ற விரும்பலாம். காத்திருந்து பாருங்கள். திமுகவைத் தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம்." என்று கூறினார்.

ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து செயல்பட அறிவுறுத்தல்: காலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இது குறித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, "இந்த நேரத்தில் நிலையான, உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்திற்கு தேவை. திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் உறுதியான, நிலையான வேட்பாளர் வேண்டும். திமுகவை வீழ்த்த ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று வலியுறுத்தினோம் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திடம் கூறினோம். ஒன்றிணைந்து இருந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என்று கூறினோம். பாஜக நிலைப்பாடு குறித்து தெரிவிக்க பிப்.7 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது." என்று கூறினார்.

அதிமுக வேட்புமனு தாக்கல் தள்ளிவைப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த மாதம் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் வியாழக்கிழமை வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், பிரதான கட்சிகளான காங்கிரஸ், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான, வரும் 7- ம் தேதி மனு தாக்கல் செய்வார் என்றும் அக்கட்சித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிமுக இணைப்பு சசிகலா பேட்டி.... அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அதிமுக இணைப்புக்கு மிக அருகில் நெருங்கி விட்டோம். தனித்தனியாக இருந்தால் அதிமுகவிற்கு நல்லது இல்லை. ஒன்றிணைந்து செயல்படுவோம் என்பது தான் ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை நான் சொல்வது. ஒன்றிணையும் சூழ்நிலை வந்துவிட்டது என்பது எனக்கு தெரிகிறது. இடைத்தேர்தலில் என்னுடைய நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்யும்: தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேட்பாளர் தேர்வை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யலாம் என்றும், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அவைத் தலைவர் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

வாக்குகளை கடிதம் மூலம் பெற... ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், கால அவகாசம் கருதி வேட்பாளர் தேர்வுக்கான வாக்குகளை பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து கடிதம் மூலம் பெற உத்தரவிட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்கள் நீடித்து வருவத அக்கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x