Published : 03 Feb 2023 04:26 PM
Last Updated : 03 Feb 2023 04:26 PM

சென்னையில் 45 வார்டு கமிட்டிகளில் ஒரு பெண் உறுப்பினருக்கு கூட இடமில்லை! 

சென்னை: சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 45 வார்டு கமிட்டிகளில் ஒரு பெண் உறுப்பினருக்கு கூட இடம் அளிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக் குழுத் தலைவர், மண்டல தலைவர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் 5 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 சபைகளும், பேரூராட்சியில் ஒரு வார்டில் 3 சபைகளும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வார்டு கமிட்டி உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்து, வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்களை வார்டு கமிட்டிக்கு செயலாளராக நியமித்து அவற்றை நடத்துவதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 45 வார்டு கமிட்டிகளில் ஒரு பெண் உறுப்பினராக இல்லை என்று Information and Resource Centre for the Deprived Urban Communities என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்த வார்டு கமிட்டி உறுப்பினர்களில் சுமார் 150 பேர் மட்டுமே பெண் உறுப்பினர்களாக உள்ளனர். அதிகபட்சமாக 39-வது வார்டில் 5 பெண் உறுப்பினர்களும், 44-வது வார்டில் 4 பெண் உறுப்பினர்களும், 117-வது வார்டில் 3 பெண் உறுப்பினர்களும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x