

புதுச்சேரி: இரு சக்கர வாகனம் வாடகைக்கு விட அனுமதி தந்துள்ளதை கண்டித்து, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சிஐடியு-வினரை போலீஸார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுச்சேரியில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுவதற்கான அனுமதியை புதுச்சேரி அரசு அளித்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இதை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கு ஆட்டோ தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருசக்கர வாகன வாடகைக்கு அனுமதி அளித்ததன் மூலம் ஆட்டோ தொழிளார்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதனிடையே, இருசக்கர வாகன வாடகைக்கு அனுமதி அளித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி சிஐடியு பொது செயலாளர் சீனுவாசன் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலமாக சட்டப்பேரவையிலுள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். போராட்டம் காரணமாக அமைச்சர் அலுவலகம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ஊர்வலமாக வந்த ஆட்டோ ஓட்டுநர்களை நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் போலீஸார் தடுப்புகள் வைத்து தடுத்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போலீஸாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், காவல்துறையினர் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை தொடர்பாக சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் சட்ட விரோதமாக இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. இது ஆட்டோ டிரைவர்களின் வருமானத்தையும், வாழ்வாதாராத்தையும் பாதித்தது. இதை தடை செய்ய வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த நிலையில் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுவதற்கான அனுமதியை புதுச்சேரி அரசு அளித்துள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சரே இதை கொடியசைத்து தொடங்கி வைத்தது ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ஆர் காங்கிரஸ், பாஜக அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஆட்டோ தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை சீரழிப்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரிக்கும். ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த அனுமதியை புதுச்சேரி அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரி போக்குவரத்து அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தோம். போலீஸார் தடுத்ததால் போராட்டம் நடத்தினோம்" எனக் கூறினர்.