கே.விஸ்வநாத் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 

கே.விஸ்வநாத் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் 

Published on

சென்னை: திரைக் கலைஞர், இயக்குநர் கலாதபஸ்வி விஸ்வநாத் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலமாக இந்திய அளவில் மக்கள் மனமெங்கும் நிறைந்துள்ள மகா கலைஞர் இயக்குநர் கலாதபஸ்வி விஸ்வநாத் மறைவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

சங்கராபரணம், சலங்கை ஒலி உள்ளிட்ட இசையை அடிநாதமாகக் கொண்ட காவியங்களை திரையில் வடித்த கலைச் சிற்பியான கே. விஸ்வநாத், நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுடன், 5 தேசிய விருதுகள், 7 நந்தினி விருதுகள், 10 ஃப்லிம்பேர் விருதுகள், ஆந்திரப் பிரதேச மாநில அரசின் விருது என எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று, திரைவானில் புகழ் நட்சத்திரமாக மின்னி வருபவர்.

அவரது பெரும் புகழ் பெற்ற “சங்கராபரணம்” திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அதே நாளில் கே. விஸ்வநாத் மறைந்திருப்பது, அவரது தீராத கலைத்தாகத்தை காலக்கல்லில் கல்வெட்டாகச் செதுக்கிச் செல்லும் அரிய நிகழ்வாக அமைந்துள்ளது.

சிரிசிரி முவ்வா, சிப்பிக்குள் முத்து, சுருதியலயலு, சுபசங்கல்பம் என மேலும் பல உன்னதமான திரைப்படங்களை, பல மொழிகளிலும் இயக்கிய கே.விஸ்வநாத், 24-க்கும் மேற்பட்டதிரைப்படங்களில் சிறந்த கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளார். கே. விஸ்வநாத் மறைவு, இந்தியத் திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in