

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை திரிகோணமலைக்கும், மட்டக்களப்புக்கும் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக 3-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5, 6 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
2-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 7 செமீ, கோடியக்கரை, திருப்பூண்டியில் ஆகிய இடங்களில் தலா 6 செமீ, தலைஞாயிறு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.