

மதுரை: சசிகலாவை விரைவில் உறுதியாகச் சந்திப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து நேற்று மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலுள்ள சாராம்சத்தைப் புரிந்து கொண்டு தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மதுரை எய்ம்ஸ் குறித்து நிதிநிலை அறிக்கையின் விரிவான பதிலில் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிமுக சட்ட விதிப்படி நடந்த அமைப்பு ரீதியான தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக கே. பழனிசாமியும் தேர்வாகி 2026 வரை பதவி இருக்கிறது. இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் நான் கையொப்பம் இடுவேன்.
வெற்றிவாய்ப்பு பிரகாசம்: சசிகலாவை விரைவில் உறுதியாக சந்திப்பேன். அதிமுக ஒன்றுபட வேண்டும் என தொண்டர்கள், பாஜகவினர் மற்றும் தமிழக மக்கள் விரும்புகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கலைஞர் நினைவுச் சின்னமாக பேனாவை நிறுவும் இடம் குறித்து சுற்றுச் சூழல் ஆய்வாளர்களிடம் கருத்து கேட்டுள்ளேன். பல்வேறு மீனவர் சங்கங்களின் கருத்துகளை நேரடியாகக் கேட்டறிய உள்ளேன். அதற்குப் பின் அதிமுகவின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.