Published : 03 Feb 2023 07:53 AM
Last Updated : 03 Feb 2023 07:53 AM

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவில் வன்முறை: தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு - 20 போலீஸார், பயணிகள் காயம்

எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், சூளகிரி அருகே கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.

கிருஷ்ணகிரி: எருது விடும் விழா நடத்த உரிய அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், கிருஷ்ணகிரி அருகேநடந்த சாலை மறியல் வன்முறையாக மாறியது. தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் வன்முறையை போலீஸார் கட்டுப்படுத்தினர். இதில், 30 வாகனங்கள் சேதம் அடைந்தன. 20-க்கும் மேற்பட்ட போலீஸார், பயணிகள் காயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிவட்டம் காமன்தொட்டி அருகே கோபசந்திரம் கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடத்த அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விழா குழுவினர் விண்ணப்பித்திருந்தனர்.

விதிமுறையை உறுதி செய்ய ஆய்வு அனுமதி வழங்கி நேற்றுமுன்தினம் (பிப்.1) அரசிதழில் வெளியானது. மேலும், இதுதொடர்பாக ஓசூர் துணை ஆட்சியர் சரண்யாதலைமையில் அரசின் விதிமுறைப்படி விழா நடைபெறுவதை உறுதிசெய்ய விழா நடைபெறும் இடத்தில்நேற்று (பிப்.2) கூட்டு புலத்தணிக்கை செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே இருமுறை எருது விடும் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அனுமதி கிடைத்ததால், விழாவில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானஇளைஞர்கள் அதிகாலையிலேயே திரண்டனர். மேலும், எருது விடும் விழாவில் பங்கேற்க 300-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

இந்நிலையில், கூட்டு புலத்தணிக்கை செய்த பின்னரே விழாதொடங்கும் என்பதால், விழா தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள், பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காலை6.30 மணிக்கு கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற சூளகிரி போலீஸார், வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டவில்லை.இதையடுத்து, பதற்றம் ஏற்பட்டது.

வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்ணீர்ப்புகை குண்டு வீசி விரட்டிய போலீஸார்.

கல்வீசி தாக்குதல்: இதையடுத்து, எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையில் அதிவிரைவுப்படை போலீஸார், வஜ்ரா வாகனங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம், “எருதுவிடும் விழாவுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் கலைந்து செல்லுங்கள்” என எஸ்பி வலியுறுத்தினார்.

அதை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டவர்கள், “மாவட்டம் முழுவதும் நிபந்தனைகள் இன்றி எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும். கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, மறியலில் ஈடுபட்ட சிலர் கல்வீசித் தாக்கினர். இதனால், வன்முறை வெடித்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நிலைமை மோசம் அடைந்ததால், தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீசி கூட்டத்தை போலீஸார்கலைத்தனர். இதில், நாலாபுறமும்வன்முறையில் ஈடுபட்டவர்கள்சிதறி ஓடினர். வன்முறையில், 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமாகின. 20-க்கும்அதிகமான போலீஸார் மற்றும் பயணிகள் காயமடைந்தனர். பெண்காவலர் ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேபோல், எஸ்பி சரோஜ்குமார் தாகூர், ஏடிஎஸ்பி சங்கு ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

மறியலால், இச்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு 15 கிமீ தூரத்துக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 6.30 மணிக்குத் தொடங்கிய போராட்டம் 11.30 மணிக்கு பின்னர் கட்டுக்குள் வந்தது. 5 மணி நேரத்துக்கு பின்னர் வாகனப் போக்குவரத்து சீரானது.

போலீஸாரின் தடியடியால் மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கலைந்து ஓடினர்.

டிஐஜி தலைமையில் பாதுகாப்பு: தொடர்ந்து, சூளகிரி, கோபசந்திரம் கிராமத்தில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி தலைமையில் எஸ்பிக்கள் சரோஜ்குமார் தாகூர் (கிருஷ்ணகிரி), ஸ்டீபன் ஜேசுபாதம் (தருமபுரி), கலைச்செல்வன் (நாமக்கல்), சிவக்குமார் (சேலம் ஆகியோர்தலைமையில் 300-க்கும் மேற்பட்டபோலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 200 பேர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x