Published : 03 Feb 2023 06:42 AM
Last Updated : 03 Feb 2023 06:42 AM
மயிலாடுதுறை/திருவாரூர்/நாகை: டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,மழை காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா 10 ஆயிரம் ஏக்கர்பரப்பளவிலான நெற்கதிர்களும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கப்பட்ட நேரத்தில் மிக கனமழை பெய்து, பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்திஉள்ளது.
வேளாண் துறையினர் ஆய்வு: இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ளபாதிப்புகள் குறித்து வேளாண் துறைகளப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வுக்குப் பின்னரே பாதிப்பு குறித்த நிலவரம் தெரிய வரும். பாதிப்பு இருந்தால் அதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றனர்.
மழை காரணமாக நேற்று பல இடங்களில் நெல் கொள்முதல் பணியும் நடைபெறவில்லை. இதனால்,கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் தாங்கள் கொண்டு சென்ற நெல்லை தார்பாய் கொண்டு மூடி வைத்திருந்தனர்.
மழையுடன், கடல் சீற்றம் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை, வேதாரண்யம் பகுதி மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன்பிடி தொழிலுக்குச் செல்லவில்லை. மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT