

தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் நிதி வழங்க மறுத்ததால் ரூ. 3,940 கோடியில் மதுரை - திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை திட்டத்தை மத்திய அரசே முழுமையான நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: தமிழக, இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கடந்த 3 ஆண்டுகளாக பாஜக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இரு நாட்டின் அமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து பேசும் அளவுக்கு சூழல் வளர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்திய மீனவர்களுக்கு நீரந்தர மீன்பிடி, ஆழ்கடல் மீன்பிடிக்கு தேவையான உதவிகள் செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்காக மத்திய மீன்வளத்துறையும், நிதித்துறையும் தலா ரூ.100 கோடி நிதி வழங்கியுள்ளன. இந்த நிதியில் 750 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வழங்கப்படும். இதனால் ஆழ்கடல் மீன்பிடி தொழில் பெருகும். ஆழ்கடல் மீன்பிடி தொடர்பாக மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதுரை - கன்னியாகுமரி, மணியாச்சி - தூத்துக்குடி, நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ரூ.3,400 கோடி செலவில் இரட்டை ரயில் பாதை திட்டம் ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான செலவில் 50 சதவீத பணத்தை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஓராண்டாகியும் மாநில அரசுகள் பதிலளிக்காததால் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியில் இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி நடைபெறுகிறது. தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3940 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணியை தொடங்கி 4 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
பாஜக தனித்துப் போட்டி
ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை எதற்காக சந்தித்தார் என்பதும், மு.க.ஸ்டாலின் பிரதமரை எதற்காக சந்திக்க உள்ளார் என்பதும் எனக்கு தெரியாது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கான பணிகளை செய்து வருகிறோம்.அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடாது. மத்திய அரசின் கல்வி திட்டத்தில் அந்தந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கேரளத்தில் மலையாளமும், மேற்கு வங்கத்தில் வங்காள மொழியும் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தமிழை வியாபாரமாக்கி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள், தமிழை விற்று பிழைத்துள்ளனர்.
தமிழ் தெரியாத சந்ததியினரை உருவாக்கியது தான் திராவிட கட்சிகளின் சாதனையாகும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.