

மதுரை மாவட்டத்தில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், மலர்களை அழி யாமல் வைத்திருந்து விற்பனை செய்ய குளிரூட்டப்பட்ட கடைகள், குளிரூட்டப்பட்ட நடமாடும் விற்பனை வாகனங்கள் அமைக்க, விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை 35 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், கிழங்குகள், நவதானிய பயிர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் என சுமார் 20,000 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கின்றனர். காய்கறி, மலர்கள் மற்றும் பழப் பயிர்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்து விற்பனைக்கு கொண்டு செல்லும் கால அளவு மிகவும் குறுகியதாக இருக்கிறது. அதனால், விற்பனை நிலையத்திற்குள் செல்வதற்குள், அங்கு விற்பனையாகாமல் ஒரு சில நாள் தேங்கினாலே விளைபொருட்கள் வீணாகும் நிலையே இருக்கிறது.
அதனால், விவசாயிகள், வியாபாரிகள் கேட்கும் அடிமாட்டு விலைக்கு தோட்டக்கலைப் பயிர்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த அழிவுகளில் இருந்து தோட்டக்கலைத் துறை விளை பொருட்களை பாதுகாத்து உரிய வகையில் சேமித்து, விவசாயிகள் நஷ்டமடையாமல் அதிக லாபம் அடைய விற்பனை சார்ந்த மானிய திட்டங்கள் தோட்டக்கலைத் துறை சார்பில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. அதற்கான விற்பனை உள்கட்டமைப்பு அமைப்பதற்கு, மானியங்கள் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தோட்டக்கலை பயிர்களுக்கான விற்பனை உள்கட்டமைப்புக்கு முதலீடுகள் செய்யும் தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. தற்பொழுது இயங்கிவரும் தோட்டக்கலை பொருள்களை விற்பனை செய்யும் முறைகளை மாற்றி விற்பனை உட்கட்டமைப்பினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலைகள் கிடைக்கும் விதமாக, விற்பனை கட்டமைப்பு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விற்பனை கட்டமைப்பினை புதிதாக அமைப்பதற்கும், வங்கியின் கடன் பெறுபவர்களுக்கு பணிகள் முடித்த பின்னர், அதற்கான பின்மானியமும் வழங்கப்படும்.
இந்த திட்டங்களில் தனிநபர், விவசாயிகள் குழு உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சுய உதவி குழுக்கள், வேளாண் விளைபொருள் விற்பனை குழு, விவசாயிகள் உற்பத்தி நிறுவனம், கம்பெனி, வணிக வாரியங்கள், கூட்டுறவு விற்பனை இணையம், மாநில அரசு முதலானவர்கள் பயனடையலாம். இதில் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அந்த திட்டத்திற்கான கருத்துருவின் மொத்த மதிப்பீட்டில், நிலத்திற்கான விலை கிராம பகுதிக்கு 15 சதவீதமும் நகர பகுதிக்கு 25 சதவீதமும் இருக்க வேண்டும்.
தோட்டக்கலை பொருட்கள், அழியாமல் விற்பனை செய்ய குளிரூட்டப்பட்ட விற்பனை மைய கடைகள் அமைப்பதற்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியமாக ரூ.5.25 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் பயனடைய விரும்புபவர்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.