

மவுலிவாக்கம் கட்டிட இடிபாடு களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கை, காலுக்கு உடல் கிடைக்க வில்லை. அதனால் கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக குறைய வாய்ப்புள்ளதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
சென்னை மவுலிவாக்கத்தில் தரைமட்டமான 11 மாடி கட்டிட இடிபாடுகளில் இருந்து 61 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். தனியாக கிடைத்த கையும் காலும் ஒரு சடலமாக கணக்கில் கொள் ளப்பட்டது. ஆனால், மீட்புப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், அந்த கை, காலுக்கான உடல் கிடைக்கவே இல்லை.
இதுதொடர்பாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:
இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 40 ஆண், 20 பெண் என மொத்தம் 60 உடல்கள் மீட்கப் பட்டன. ஒரு கை மற்றும் ஒரு கால் தனியாக எடுக்கப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனை யில் 54, ராமச்சந்திரா மருத்துவ மனையில் 6 என மொத்தம் 60 உடல்கள் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டன. ஒரு ஆண் சடலம் மட்டும் அடையாளம் காணப்படாத நிலையில் ராயப் பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தனியாக எடுக்கப்பட்ட கை, காலையும் சேர்த்துத்தான் பலியானவர்களின் எண்ணிக்கை 61 என தெரிவித் தோம். ஆனால் கை, காலுக்கான உடல் கட்டிட இடிபாடுகளில் இல்லை. எனவே, அவை பலியான 60 பேரில் யாருடையதாகவும் இருக்கலாம். அதனால் கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பலியானவர்களில் 14 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 38 பேர் ஆந்திராவையும் 7 பேர் ஒடிசாவையும் சேர்ந்த தொழி லாளர்கள். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ள ஆண் உடலுக்கு இரண்டு பேர் உரிமை கோரினால், டிஎன்ஏ பரி சோதனை செய்து உரியவரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
9 பேர் டிஸ்சார்ஜ்
கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் 27 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 26 பேர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் தலையில் படுகாயம் அடைந்த பெண், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து 8 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். மற்ற 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆந்திர மாநில விஜயநகர மாவட்டத்தைச் சேர்ந்த சுசீலா (24) என்ற பெண்ணும் சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்.