

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே 67 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள 31 வழக்குகளில் இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு தரப்பு முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு ஆகிய காவல் நிலையங்களில் 2012 முதல் 2015 வரை 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 86 வழக்குகள் மேலூர் நீதிமன்றத்திலும், மீதம் உள்ள வழக்குகள் உசிலம்பட்டி, மதுரை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.
இதில் 23 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மீதமுள்ள 75 வழக்குகளில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இதுவரை 67 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில் 60 வழக்குகளின் குற்றப்பத்திரிகை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு மதுரை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந் நிலையில், 23 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தடையை விலக்கி உத்தரவிட்டது.
இதையடுத்து தடை விலக்கப்பட்ட வழக்குகள் உட்பட மீதம் உள்ள 31 வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணையை விரைவுபடுத்த அரசு தரப்பு முடிவு செய்துள்ளது. அனைத்து வழக்குகளின் குற்றப் பத்திரிகை தயாரிப்பு பணியில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலா, டி.எஸ்.பி. சூர்யமூர்த்தி, ஆய்வாளர்கள் பிரகாஷ், ராஜாசிங், முத்துபாண்டி ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நான்கு வழக்குகளில் குற்றப் பத்திரிகை தயாரிக்கப்பட்டு மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக உள்ளது. மேலூர் நீதித்துறை நடுவர் தற்போது விடுமுறையில் உள்ளதால், அவர் பணிக்கு திரும்பியதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் முடிவு செய்துள் ளனர்.
இது தொடர்பாக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷீலா கூறுகையில், ‘கிரானைட் முறைகேடு வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள் ளது. இதனால் கிரானைட் முறை கேடு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றத்தில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்.