

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷின் பணியிட மாற்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்ட 4-வது ஆட்சியராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொறுப்பேற்ற ஆகாஷ் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, இம்மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்குமுன் ஊத்துமலையில் விவசாயிகள் திரண்டு ஆட்சியர் இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகளும், விவசாயப் பிரதிநிதிகளும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் ஆகாஷின் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி சுவரொட்டிகளும் ஒட்டியிருந்தனர். போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.ஜாகீர் உசேன், செயலாளர் கண்ணையா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமயில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.