Last Updated : 03 Feb, 2023 01:43 AM

 

Published : 03 Feb 2023 01:43 AM
Last Updated : 03 Feb 2023 01:43 AM

புதுச்சேரி | லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்கள் வாகனம் இயக்கினால் பெற்றோரின் வாகன பதிவு சான்று ஓராண்டு ரத்து

புதுச்சேரி: ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் வாகனத்தை ஓட்டினால் பெற்றோருக்கு சிறையுடன் வாகனத்தின் பதிவு சான்று ஓராண்டு ரத்தாகும். ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் இதுதொடர்பாக கூறியதாவது: புதுவையில் சமீபகாலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டிச் செல்வது அதிகரித்து வருகிறது. இவர்கள் வாகனத்தை இயக்க சட்டப்படி அனுமதி இல்லை. இச்சிறுவர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் வாகனத்தை ஓட்டுவதாக தெரிகிறது. இவ்வாறு வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 3 வருடம் வரை சிறை தண்டனையும் மற்றும் ரூ.25,000/-அபராதமும் மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் 12 மாதம் வரை ரத்து செய்யப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஒட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல்
(ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்), கைப்பேசி பேசிக்கொண்டு வாகன ஓட்டுதல், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கின்போது இயக்குதல், அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், சரக்கு வண்டிகளில் நபர்களை ஏற்றிச் செல்வது, சரக்கு வண்டிகளில் அதிக சுமை ஏற்றுதல் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

வாகனம் ஓட்டும் போது வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருத்தல் கட்டாயம் அல்லது டிஜிலாக்கர் (Digilocker) அல்லது பரிவாஹன் (Parivahan) மூலம் ஓட்டுநர் உரிமத்தை காட்டுதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். முந்தைய அபராத விவரப்படி தலைக்கவசம் இன்றியும். கைபேசி பயன்படுத்தி விதிமீறல்கள் அதிகம் பதிவாகியுள்ளது. வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசுவோருக்கும், தலைக்கவசம் அணியாது இரு சக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல் முறை ரூ.1000/- அபராதம் மட்டுமன்றி 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மின்னணு கருவிமூலம் (e-challan machine) அபராத ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபராத தொகை பணமாகவோ பண அட்டைகள் மற்றும் QR கோடு ஸ்கேன் மூலமாக உடனடியாக இணையதளம் மூலம் செலுத்தலாம். மேலும், UPI, ரூபே கார்டு. இணையதள வங்கி சேவை, கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்தி SBI கேட்வே மூலம் செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x