

விசாரணைக்கு ஆஜராகுமாறு பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி கூட்டாளிகள் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகிய 2 பேருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இருவரும் இன்று ஆஜராக வேண்டுமென்று சம்மனில் கூறப்பட்டுள்ளது.
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம்குமார், கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரும் பண மோசடிக்கு உதவி செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சேகர் ரெட்டிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக கொல்கத்தாவைச் சேர்ந்த பரஸ்மால் லோதா, சென்னையைச் சேர்ந்த அசோக் எம்.ஜெயின், மகாவீர் கிரானி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் கைதான சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள் இருவர் மீதும் அமலாக்கத்துறை தனியே வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு ரத்தினம், ராமச்சந்திரன் இருவருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை. இந்நிலையில், 19-ம் தேதி (இன்று) ஆஜராகுமாறு ரத்தினம், ராமச்சந்திரன் இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.