பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள மூன்றாம் எண் புயல் கூண்டு.
பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள மூன்றாம் எண் புயல் கூண்டு.

மன்னார் வளைகுடா, குமரிக் கடலை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன், தூத்துக்குடியில்  3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published on

ராமேசுவரம்: வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இலங்கையில் கரையை கடந்த நிலையில் இன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இலங்கையில் உள்ள திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையைக் கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நிலவக்கூடும். இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பதற்காக கரையில் ஏற்றி வைக்கின்றனர்.
பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பதற்காக கரையில் ஏற்றி வைக்கின்றனர்.

மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 40 கி.மீ முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என்று என்ற வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து வியாழக்கிழமை காலை பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

பாம்பனில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டடதால் குழந்தைகள் குடை பிடித்துள்ளனர்.
பாம்பனில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டடதால் குழந்தைகள் குடை பிடித்துள்ளனர்.

முன்னதாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவித்திருந்ததால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடற்பகுதியான பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்களின் படகுகளை ஆழமற்ற பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்தனர். வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி ராமேசுவரத்தில் 20.20 மி.மீ., தங்கச்சிமடத்தில் 07.20 மி.மீ, 05.50 மழையும் பதிவானது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in