

கும்பகோணம்: கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிர் சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் கடந்த நவம்பர் நடவு செய்து, தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு சார்பில் கொள்முதல் செய்யத் தஞ்சாவூர் மாவட்டத்தில் 350 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை முதல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதே போல் திருவிடைமருதூர் வட்டம் மணிக்குடி கிராமத்தில் இயங்கி வரும் கொள் முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்த நெல் மணிகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால், நெல் மணிகள் ஈரமானால் உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாது என்பதால், அதனைச் சுற்றியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் பாபநாசம் வட்டம், மருத்துவக்குடி கொள் முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள சுமார் 1500 நெல் மூட்டைகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதே போல் கும்பகோணம் கோட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இது குறித்து காவிரி பாசன குத்தகை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அமிர்தகண்ணன் கூறியது: "தற்போது பருவம் தவறி மழை பெய்வதால், கொள்முதல் நிலையங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் அறுவடைக்குத் தயார் நிலையிலுள்ள சம்பா-தாளடி நெற்பயிர்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் அளவில் மழையால் சாய்ந்து விட்டது.
இதனை அறுவடை செய்தால், உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியுமா என்பது கேள்வி குறியாகியுள்ளது. மேலும், கதீர்களில் உள்ள நெல் மணிகள் கீழே கொட்டி விடுவதால், போதுமான அளவில் உற்பத்தி இருக்காது.
எனவே, தமிழக அரசு, சாய்ந்துள்ள நெற்பயிர்கள் குறித்து கணக்கீடு செய்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும், ஒன்றியங்கள் தோறும் சுமார் 1 லட்சம் மூட்டைகள் சேமிக்கும் வகையில் கிடங்கும், 10 கிராமத்திற்கு 1 சேமிப்பு கிடங்கும் கட்டித்தர வேண்டும், மழையினால், 20 சதவீதம் ஈரப்பதத்துடன் கொண்டு வரும் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.