Published : 02 Feb 2023 02:40 PM
Last Updated : 02 Feb 2023 02:40 PM

கடலுக்குள் கருணாநிதி பேனா சின்னம் வைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் கருத்து

செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டுச்சாலையில் நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

திருவண்ணாமலை: “பலரும் சின்னங்கள் வைத்து கடலை நாசப்படுத்திவிடுவார்கள் என்பதால் கடலில் பேனா வைப்பது முன்னுதாரணமாக இருக்கக் கூடாது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக 2.0 விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாங்கால் கூட்டுச்சாலையில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “குட்காவுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும். மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். குட்கா பழக்கம் அதிகரித்தால், இளைய சமுதாயம் சீரழியும். புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். குட்காவை தடை செய்வது அவசரமானது, அவசியமானதாகும்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் சில நல்ல அம்சங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 157 செவிலியர் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு, விவசாயத்துக்கு ரூ.20 லட்சம் கோடி மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம். திண்டிவனம் - நகரி ரயில்வே திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில்வே திட்டம், மொரப்பூர் - தருமபுரி ரயில்வே திட்டம், சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர் வழியாக சிதம்பரம் வரையிலான கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் உட்பட பல திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

எய்ம்ஸ்-க்கு நிதி இல்லை: வருமான வரி சலுகையில் குளறுபடிகள் உள்ளன. ரூ.5 லட்சம் வரை முழு வரி இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கடந்த ரூ.89 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.62 ஆயிரம் கோடிதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 சதவீத நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. இத்திட்டத்தால் கிராமப்புற பெண்களுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. நிதி குறைக்கப்பட்டுள்ளதால் 22 சதவீத அளவுக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

தமிழகம் சார்ந்த திட்டங்களான மதுரை எய்ம்ஸ் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஜப்பான் நிதியை எதிர்பார்க்கின்றனர். அந்த நிதி வருவதற்கு தற்போது வாய்ப்பில்லை. 2017-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கு ஒரு செங்கல் கூட கட்டவில்லை.

தமிழக நிர்வாகம் ஸ்தம்பிக்கும்: ஆறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ள மத்திய அரசு, தமிழகத்துக்கு ஏன் ஒதுக்கீடு செய்யவில்லை. தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.89 ஆயிரம் கோடி, கல்வித் துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி நிதி போதாது. சில திட்டங்களை வரவேற்கிறோம். பல திட்டங்களில் குறைகள் நிறைய உள்ளன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது, யாருக்கும் ஆதரவு இல்லை என எங்களது நிலைபாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டோம். இடைத்தேர்தல் தேவையில்லாது. நீர் மேலாண்மை, விவசாயம் என மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு நேரத்தை செலவிடுகிறோம். மற்ற கட்சிகள், இடைத்தேர்தலுக்கு சுற்றி வருகின்றனர். அமைச்சர்கள் சுற்றி வர போகிறார்கள். தமிழகத்தின் நிர்வாகம் ஒரு மாதத்துக்கு ஸ்தம்பிக்க போகிறது.

முதல்வர் நிலைபாடு என்ன? - கடலூர் மாவட்டம் என்எல்சிக்காக 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த திமுக அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் துடிக்கின்றனர். என்எல்சி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்படுகின்றனர். விவசாயிகளுக்கு சாதகமாக செயல்படவில்லை. புதிய வீராணம் நிலக்கரி திட்டம் என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளன. வீராணம் ஏரியை சுற்றி உள்ள 3 வட்டங்களில் நிலக்கரி எடுக்கப்பட உள்ள திட்டமாகும்.

எம்இசிஎல் நிறுவனத்துக்கு ஆய்வு நடத்த என்எல்சி நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. 200 ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு நடைபெறுகிறது. பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலத்தில் வீராணம் ஏரி உள்ளது. தமிழகத்துக்கு என்எல்சி தேவையில்லை. விவசாயிகளுக்கு எதிரானவர்களா அல்லது விவசாயிகளை சார்ந்தவர்களா திமுக என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நிலைபாட்டை தெளிவுப்படுத்த வேண்டும். விவசாயம், விவசாயிகள் மற்றும் விளை நிலங்களுக்கு எதிராக திமுக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிக்கும்: மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அண்ணா சதுக்கம் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் விருப்பப்பட்டார். அதனால்தான், மெரினா கடற்கரையில் எதையும் செயல்படுத்தக் கூடாது என்ற பாமக தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்றோம். அதன் பிறகுதான், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடல் என்பதில் சுற்றுச்சூழல் தொடர்பான பல பிரச்சினைகள் உள்ளன. எனவே, கருணாநிதி நினைவிடத்தில் பேனாவை வைக்கலாம் என்பது எங்களது கோரிக்கையாகும். கடலில் பேனா வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிடும். பல சின்னங்கள் வைக்கப்பட்டு கடல் நாசப்படுத்தப்படும். கடலில் பேனா வைப்பது என்பது முன் உதாரணமாக இருக்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x