Published : 02 Feb 2023 02:15 PM
Last Updated : 02 Feb 2023 02:15 PM

காலை உணவுத் திட்டம்: வேலூரில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

வேலூரில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்

வேலூர்: வேலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (பிப்.2) நேரில் ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் நேரடியாக ஆய்வு செய்யும் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக 1.2.2023 அன்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை, மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (2.2.2023) கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், வேலூர், சத்துவாச்சாரி, பாரதி நகரில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் மருத்துவம் சார்ந்த தனிநபர் கண்காணிப்பு, மனநலம் சார்ந்த ஆலோசனை போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட வேலூர் மாநகராட்சியில் முதற்கட்டமாக 48 தொடக்கப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் பயிலும் 3,249 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 34 அரசுப் பள்ளிகளில் பயிலும் 3,701 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர், சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனியில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையற் கூடத்திற்கு நேரில் சென்று முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்குள்ள ஒவ்வொரு சமையல் அறைகளுக்கும், உணவு ஏற்றும் பகுதிக்கும் சென்று பார்வையிட்டதோடு, உணவு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் உணவினை சுகாதாரமான முறையில் தரமாகவும், சுவையாகவும் தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர், சத்துவாச்சாரி, காந்தி நகரில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிக்கு நேரில் சென்று, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அலமேலுமங்காபுரத்தில் 132 மாணவ, மாணவியர்கள் பயிலும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிக்கு முதல்வர் நேரில் சென்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பறிமாறினார்.

இந்த ஆய்வின் போது, அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காய்கறி சாம்பாருடன் கூடிய உப்புமா வகைகளும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிச்சடி வகைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் இனிப்பு கேசரியும், புதன்கிழமை காய்கறி சாம்பாருடன் கூடிய பொங்கல் வகைகளும் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், உணவினை காலை 6.30 மணிக்குள் தயாரிக்க வேண்டும் என்றும், அவை காலை 7.30 மணிக்கு பள்ளிகளில் பரிமாறப்பட வேண்டும் என்றும், , மாணவர்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் உணவு பறிமாற வேண்டும் என்றும், உணவு உண்ணும் மாணவர்களின் பதிவேடு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சத்தான மற்றும் தரமான உணவினை மாணவர்களுக்கு வழங்கிட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உணவு தயாரிக்கும் ஊழியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x