

வேளச்சேரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தண்ணீர் பாட்டில், குளிர்பானம் ஆகியவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை, வேளச்சேரியில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் (மால்) உள்ள உணவகங்களில் தண்ணீர் பாட்டில் கள் மற்றும் குளிர்பானங்கள் வெளிச் சந்தையை விட கூடுதல் விலைக்கு விற்பதாக TNLMCTS என்ற மொபைல் ஆப் மூலம் புகார்கள் பெறப்பட்டன.
இதைத் தொடர்ந்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு செயலர் பெ.அமுதா உத்தரவின்பேரில், வேளச்சேரியில் உள்ள அந்தக் குறிப்பிட்ட வணிக வளாகத்தில் சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆ.திவ்யநாதன் தலைமையில், தொழிலாளர் ஆய்வர் 2-ம் வட்டம், சென்னை மற்றும் தொழிலாளர் துணை ஆய்வர்கள் திருவள் ளூர், காஞ்சிபுரம், பரங்கிமலை மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் 13-ம் வட்டம், 18-ம் வட்டம், 19-ம் வட்டம், 21-ம் வட்டம், 22-ம் வட்டம் ஆகியோர் 15 உணவகங்களில் ஆய்வு செய்தனர்.
அதில், 12 உணவகங்களில் இரட்டை அதிகபட்ச சில்லறை விலையும், 2 உணவகங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது கண்டறியப் பட்டது.
இதையடுத்து, அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற புகார்களை நுகர்வோர் மேற்கண்ட மொபைல் ஆப் மூலம் தொழிலாளர் துறைக்குத் உடனடியாக தகவல் தெரிவித்து விரைந்து தீர்வு காணலாம் என சென்னை 2-ம் வட்ட தொழிலாளர் ஆய்வர் எஸ்.நீலகண்டன் தெரிவித்துள்ளார்.