Published : 02 Feb 2023 06:43 AM
Last Updated : 02 Feb 2023 06:43 AM
சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்தில், தமிழகத்துக்கு எவ்வித திட்ட அறிவிப்பும் இல்லை. இது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் செய்துள்ள மாற்றம், 157 மருத்துவக் கல்லூரிகளில் 157 புதிய நர்சிங் கல்லூரிகளைத் தொடங்குவது, மாநிலங்களுக்கு மூலதனச் செலவினங்களுக்காக வட்டியில்லா கடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் போன்றவை வரவேற்கத்தக்க அம்சங்கள்.
எனினும், தனிநபர் வருமான வரி மாற்றம் புதிய முறைக்கு மட்டுமே பொருந்தும் என்பது, ஒரு சாராருக்கு மட்டுமே பயனளிக்கும். இந்த மாற்றத்தை பழைய முறைக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை 2 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. தேர்தல் நடைபெற உள்ளமாநிலங்களை மட்டும் குறிவைத்து, வளர்ச்சித் திட்டங்கள், நிதியுதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களுக்கான மூலதனக் கடனுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிப்பது முழு பயனையும் தராது. இந்த திட்டத்தில், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்க, புதிய பேருந்துகளை வாங்கவும் அனுமதிக்க வேண்டும்.
நகர்ப்புற கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது மிகவும் குறைவாகும். வீட்டுவசதித் திட்ட ஒதுக்கீடு ரூ.79,500 கோடியாக உயர்ந்தபோதும், வீட்டின் கட்டுமான விலையை அதிகரிக்காவிட்டால், மாநிலங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு தனது பங்கை உயர்த்த வேண்டும்.
புதிய திட்டங்களுக்கான தனிநிதி ஒதுக்கீடு இல்லாதது வருந்தத்தக்கது. கரோனாவில் இருந்து நாடு மீண்டு வரும் சூழலில், மத்திய பட்ஜெட் மீது மக்களிடையே இருந்தபெரும் எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. மொத்தத்தில் இது பாஜக ஆட்சியில் உள்ள, தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட் ஆகும்.
வேலையில்லா திண்டாட்டம், விலை ஏற்றம், பணவீக்கத்தைப் புறக்கணித்து, மாநிலங்களின் நிதி சுதந்திரத்துக்கு எவ்வித ஆக்கப்பூர்வ முயற்சிகளையும் முன்னெடுக்காமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட், ஏழை, நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த நம்பிக்கையையும் அளிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் மத்திய பட்ஜெட் வழக்கம்போல பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பிரதமரின் தொலைநோக்குப் பார்வையோடு உருவாக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை,நாடு முன்னோக்கிப் பயணிப்பதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. இதில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான வழிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு, 157 செவிலியர் கல்லூரிகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு நிதி அதிகரிப்பு, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சில பொருட்களுக்கு சுங்க வரியைக் குறைத்திருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நிம்மதியளிக்கும் இந்த நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: கர்நாடக மாநிலத்துக்கு பாசனம் மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிக வருவாய் அளிக்கும் தமிழகத்துக்கு சிறப்பு திட்டம் எதுவுமில்லை. இந்த நிதிநிலை அறிக்கை, தமிழகத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்துக்கும் எந்த வகையிலும் உதவாது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மனதில்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், நடுத்தர வர்க்கத்தை திருப்திப்படுத்துவதற்காக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உட்கட்டமைப்பு வசதி, தொழில் வளர்ச்சி, விவசாய முன்னேற்றத்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஏழ்மையை ஒழிக்க திட்டங்கள் இல்லாதது கண்டனத்துக்குரியது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படிஎட்ட முடியும்? வேளாண் கடன் வட்டிக் குறைப்பு, பருத்தி இறக்குமதி வரி குறைப்பு போன்றவை இடம்பெறவில்லை. பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கு ரூ.19,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால், காவிரிப் பாசன மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: உணவு மானியம் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழகத்துக்கு எந்தமுக்கியத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. பெரும்பான்மை ஏழை மக்களின் நலனைப் பற்றிக் கவலைப்படாமல், கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும். வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு நடுத்தரக் குடும்பத்தினருக்குப் பயனளிக்கும்.
பாமக தலைவர் அன்புமணி: வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வும், சிகரெட் மீது 16 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும் வரவேற்கத்தக்கவை. 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதால், இதை இந்திய மக்களுக்கான, நாட்டின் வலிமைக்கான நிதிநிலை அறிக்கையாக தமாகா கருதுகிறது. தனிநபர் ஆண்டு வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்புக்குரியது. வேளாண், கல்வி, தொழில், சுகாதாரத் திட்டங்களால் மக்கள் பயனடைவதுடன், நாடும் வளம் பெறும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி, பழங்குடியினர் திறன் மேம்பாட்டுக்கு ரூ.115 கோடி போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு, தனி நபர் வருமானம் உயர்வு உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: ரயில்வே கட்டமைப்பு, புதிய விமான நிலையங்கள், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு போன்றவற்றை வரவேற்கிறேன். தொழில், வியாபார வளர்ச்சிக்கான அறிவிப்புகள் எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு, வேளாண் துறைக்கு சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை. மூத்த குடிமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சிறப்புரயில்வே கட்டணச் சலுகையை திரும்ப வழங்காதது, தமிழகத்துக்கான சிறப்புத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ்.மாசிலாமணி: மத்திய அரசு அறிவித்த வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய அறிவிப்பு, சட்டப்பூர்வ கொள்முதல் அறிவிப்பு போன்றவை இல்லை. விவசாயிகளுக்கான திட்டத்தை ஸ்டார்ட்அப் மூலம் வழங்குவது விவசாயிகளுக்குப் பயனளிக்குமா? பசு வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது, விவசாயிகளுக்கு நேரடியாகப் பயனளிக்காது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ்: காங்கிரஸ் ஆட்சியில் அழிவை நோக்கிச் சென்ற விவசாயத் துறையை மீட்டெடுத்து, நல்ல திட்டங்களை தொடர்ந்து நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதை வரவேற்கிறேன்.
சமக தலைவர் சரத்குமார்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு, வீடு கட்டும் திட்டத்துக்கு அதிக நிதி உள்ளிட்டவை இடம்பெற்றாலும், உணவுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு, நிறுத்தப்பட்ட சமையல் எரிவாயு மானியம் மீண்டும் செயலாக்கம் போன்ற முக்கிய அறிவிப்புகள் இல்லாதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT