நீட் தேர்வு முடிவு வெளியிடத் தடை: கி.வீரமணி வரவேற்பு

நீட் தேர்வு முடிவு வெளியிடத் தடை: கி.வீரமணி வரவேற்பு
Updated on
3 min read

நீட் தேர்வு முடிவை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கு மாநிலம் வேறு வேறு வினாத்தாள்களும் வழங்கப்பட்டு நீட் தேர்வு நடைபெற்றுள்ளதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது - இறுதி நியாயம் கிடைக்கும்வரை மாணவர்களும், பெற்றோர்களும் நீதிமன்றங்களிலும், வீதிமன்றங்களிலும் போராடி வெற்றி பெறத் தயாராக வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

நீட் தேர்வு சம்பந்தமாக நடைபெற்ற குளறுபடியால் பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகள் தொடுத்த வழக்கில், மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் நீதிபதி எம்.வி.முரளிதரன் எதிர் தரப்பான சிபிஎஸ்இயிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு இதுவரை பதில் இல்லை என்று அரசு வழக்குரைஞர் கூறிய பின், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்துள்ளார் என்பது பல பெற்றோர்களாலும், கல்வி அறிஞர்களாலும், பாதிக்கப்பட்ட மாணவர்களாலும், சமூகநீதி வேட்கையாளர்களாலும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இதுபற்றி உயர் நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை ஆணை பிறப்பிப்பதற்கு முன் தெளிவுபடுத்தியதாவது:

மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அந்த நிபந்தனையை மீறி ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது நீட் தேர்வில் பாரபட்சம் நடைபெற்றிருப்பது தெரிய வருகிறது. எனவே, நீட் தேர்வு முடிவு வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

பின்னர் அடுத்த விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து, மனுவுக்கு மத்திய குடும்ப நலத்துறை செயலாளர், பொது சுகாதாரப் பணிகள் இயக்குநர் ஜெனரல், இந்திய மருத்துவ கழக தலைவர், சிபிஎஸ்இ செயலாளர்/ தலைவர், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நீட் தேர்வு என்பது - மருத்துவக் கல்லூரிகளில் ஒடுக்கப்பட்டோர், கிராமப்புற மாணவ, மாணவிகள் டாக்டர்களாக வருவதைத் தடுக்கவே உருவாக்கப்பட்ட கண்ணிவெடியாகும். மாணவர்களுக்கு அளப்பரிய சுமையை மன அழுத்தத்தைத் தரக்கூடிய தேவையற்ற தலைச் சுமையாகும்!

10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வினை (இனி வரும் ஆண்டுகளில்) தொடர்ந்து சந்திக்கவிருக்கும் இளம் மாணவர்களுக்கு இந்த நீட் ஆயத்தம் என்பது அவ்வளவு எளிதா? ஏற்கெனவே பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளனர் - கொஞ்சம் மதிப்பெண் குறைந்ததாலே!

தமிழ்நாட்டின் வரலாறு தனியானது. இது அனைவருக்கும் அனைத்தும் தரும் அமைதி பூங்கா - சமூகநீதி தழைக்கும் பெரியார் பூமி. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய 21 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசே தனிச் சட்டம் இயற்றியது! உயர் நீதிமன்றமும், கல்வி நிபுணர்களின் அறிக்கையையும் ஆராய்ந்து ஏற்று சட்டம் செல்லும் என்ற தனி வரலாறு படைத்த மாநிலம்.

பொதுப்பட்டியலில் மாநில அரசுக்குள்ள சட்ட உரிமையையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் விதிவிலக்குகோரியுள்ள மசோதாவை மத்திய அரசு தடுத்து, குடியரசுத் தலைவருக்கே அனுப்பாமல், அதற்குரிய தகுந்த காரணங்கள் எதையும் சொல்லாமலும் காலந்தாழ்த்தி வருவது ஏன்?

மத்திய மனிதவளத் துறை (கல்வி) அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா என்பவரும் தமிழகத்துக்கு விதிவிலக்குத் தர முடியாது என்று கூறுவது எவ்வகையில் இந்திய அரசியல் சட்டப்படி சரியானதாகும்?

அரசியல் சட்டப்படி, மாநிலங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இதற்கென தனி மசோதா அனைத்துக் கட்சிகளாலும் முன்மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, டில்லிக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏறத்தாழ நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதே! அங்கே போய்ச் சேர்ந்ததாகவே தெரியவில்லையே!

இங்குள்ள தமிழ்நாடு முன்னாள், இந்நாள் முதல்வரும், இதர அமைச்சர்களும், நீட் தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கப் பிரதமரிடம் டில்லியில் வலியுறுத்தியுள்ளோம்; கோரிக்கை வைத்துத் திரும்பியுள்ளோம் என்ற கீறல் விழுந்த கிராமப்போன் தட்டு குரல் ஒலிபோல கூறுவதால், என்ன விழுமிய பயன் ஏற்பட்டுள்ளது?

தமிழ்நாடு அரசு கேட்பது சலுகையோ, பிச்சையோ அல்ல; ஜல்லிக்கட்டு விதிவிலக்குச் சட்டம் எப்படியோ அதுபோன்றே இதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டாக வேண்டும் என்பதற்கு அதற்கு மேலும் கூடுதல் காரணங்கள் பல உண்டு. விதிவிலக்கு அளிக்கக்கோரும் தமிழ்நாட்டுச் சட்டம் பற்றிய வரலாற்றை மத்திய அரசுக்கு நினைவுபடுத்துவது மாநில அரசின் சட்டக் கடமை - அரசின் பொறுப்பு!

நீட் தேர்வுக்கும் பயிற்சி என்று மாநில அரசு கூறுவதே இரட்டை நாக்கு நடை, இரட்டை வேடப் போக்கு, இது கூடவே கூடாது. ஒரே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். நடத்தப்பட்ட நீட் தேர்வில் நடைபெற்ற விரும்பத்தகாத - உடற்சோதனைகளும், மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் கேள்வித்தாள்கள், மொழிக்கு மொழி மாறுபடும் கேள்வித் தாள்களும் முரண்பாடுகள் மட்டுமல்ல; எதிர்ப்பவர்களைப் பழிவாங்கும் போக்கும் அல்லவா?

ஒரே கேள்விதானே சீர்மையின் அடையாளமாக இருக்க முடியும்?குஜராத் மாநிலத்திற்கு எளிய கேள்விகள்; தமிழ்நாட்டிற்கும், மேற்கு வங்கத்திற்கும் கடினமான கேள்விகள் என்று மாணவர்கள் தரப்பில் கூறப்படுவதுபற்றி ஆராயவேண்டும். பெற்றோர்களும், மாணவர்களும் நீதிமன்றங்களானாலும், வீதி மன்ற தளமானாலும் இடையறாத விழிப்புடன் போராடினால், இனிவருங்கால கிராம சமுதாய மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்ற முடியும்!

சிபிஎஸ்இ என்ற இந்தி, சமஸ்கிருத மொழிகளைக் கட்டாயமாக்க, திணிக்கவே இப்படி ஒரு உத்தியை மத்திய அரசு கையாளுகிறதோ என்ற ஐயம் பரவலாக எழுந்துள்ளது. நீதிமன்றங்களை நோக்கி படையெடுக்க ஆயத்தமாவீர். மக்கள் மன்றம் திரண்டாலொழிய இத்தகைய சமூக அநீதிக்கு - நீட்டிற்குத் தக்கப் பரிகாரம் காண முடியாது. எனவே, விழிப்போடு விரைந்து செயலாற்றுவீர்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in