

சென்னை: தமிழகத்தின் தினசரி மின்தேவை வரும் கோடைகாலத்தில் 19 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என மின்வாரியம் கணித் துள்ளது.
தமிழகம் முழுவதிலும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பயனாளர்களுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்கிறது. இதனால், தமிழகத்தின் தினசரி மின்தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
குளிர்காலத்தில் மின்விசிறி, கூலர், ஏ.சி. உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு குறைவதால், தினசரி பயன்பாடு 12 ஆயிரம் மெகாவாட்டாக குறையும். கோடைகாலத்தில் இவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால், தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டாக அதி கரிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் தினசரி எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை மின்வாரியம் முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப தனது சொந்த மின்னுற்பத்தியை அதிகரிப்பதோடு, வெளி சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்து தினசரி தேவையை பூர்த்தி செய் யும்.
தேவையை பூர்த்தி செய்ய... இந்நிலையில், வரும் கோடைகாலத்தில் தினசரி மின்தேவை எவ்வளவு அதிகரிக்கும் என மின்வாரியம் கணித்துள்ளது. அதன்படி, வரும் கோடைகாலத்தில், தமிழ கத்தின் தினசரி மின்தேவை 19 ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சராசரி தேவையைவிட 4 ஆயிரம் மெகாவாட் அதிகம்.
அதிகரிக்கும் இந்த மின்தேவையை பூர்த்தி செய்ய, குறுகியகால அடிப்படையில் வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்பட உள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.