Published : 02 Feb 2023 06:07 AM
Last Updated : 02 Feb 2023 06:07 AM

ஈரோடு இடைத்தேர்தல் | மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நல்ல முடிவு: அண்ணாமலை தகவல்

திருச்சி: வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கு அடுத்து வரக்கூடிய 25 ஆண்டுகள் அமிர்த காலம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்கு அச்சாணியாக இந்த பட்ஜெட் இருக்கும். நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நிகழாண்டு தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என நம்புகிறோம்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுத்துவிட முடியாது. இடைத்தேர்தல் முடிந்துவிட்டால், அடுத்த 2 மாதங்களில் அதை மறந்துவிடுவர். வரும் மக்களவைத் தேர்தலையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும்.

மேலும் ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் கொடுக்கலாமா என பேசுகின்றனரே தவிர, மக்களுக்கு என்ன செய்யலாம் என அவர்கள் பேசவில்லை. எனவே, இந்த இடைத்தேர்தலைப் பொறுத்தமட்டில் ஆளுங்கட்சிக்கு எதிராக வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அதற்கேற்ப எங்களது நிலைப்பாட்டை விரைவில் தெளிவுபடுத்துவோம்.

13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் வகையில், மக்களின் வரிப்பணத்தில் கடலில் பேனா சிலை வைப்பதற்கு இந்த அரசு ஆர்வம் காட்டுகிறது. திமுகவினர் தங்களது சொந்தப் பணத்தில், அவர்களது நிலத்தில் எதை வேண்டுமானாலும் வைக்கலாம். அதில் தவறில்லை.

ஆனால் பொது இடத்தில் வைக்கும் விஷயத்தில் மக்களின் கருத்தை மதிக்க வேண்டும். கடலில் பேனா சிலை வேண்டாம் என்பதுதான் பெரும்பாலான மக்களின் கருத்து. மக்களின் உணர்வுகளை மதிக்காவிட்டால், அதன்விளைவு வரக்கூடிய தேர்தலில் திமுகவுக்கு தெரியவரும். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றார்.

பின்னர் திருச்சியிலிருந்து அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x