Published : 02 Feb 2023 06:24 AM
Last Updated : 02 Feb 2023 06:24 AM
ஈரோடு: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனை பேனரில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயரிடப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், மதியத்துக்கு மேல், ‘முற்போக்கு’ மாயமானது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பெருந்துறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி தொடங்கியபோது, வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தமாகா இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா, மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
அதிமுக தேர்தல் பணிமனை தொடர்பான பேனரில், ‘ஈரோடு கிழக்கு தொகுதி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி’ தலைமை தேர்தல் அலுவலகம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயர் உள்ள நிலையில், கூடுதலாக முற்போக்கு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், மதியத்துக்கு மேல், ‘முற்போக்கு’ என்ற வார்த்தை மாயமாகி, தேசிய ஜனநாயக கூட்டணி என்று மாற்றப்பட்டது.
அதேபோல், முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன்மூர்த்தி படங்கள் மட்டுமே இடம்பெற்று இருந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதமர் மோடி உள்ளிட்ட வேறு தலைவர்கள் படங்கள் ஏதும் பேனரில் இடம்பெறவில்லை. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதில் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT