

கடலூர்: கடலூர் அருகே உள்ள உச்சிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடலூர் மாவட்ட நீதித்துறையில் தொழில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இவருக்கும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று காலை சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்திற்கு முன்தினமான நேற்று முன்தினம் மாலை மணமக்களின் உற்றார் உறவினர் திருமண மண்டபத்துக்கு வந்திருந்தனர். மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் அனைவரிடத்திலும் ஆசி பெற்றனர். பின்னர் இரவு 12 மணி வரை இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், அதிகாலை யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தை விட்டு மாப்பிள்ளை வெளியேறி விட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே, மணமகள் வீட்டார் தங்கள் உறவினர் மகன்இளவரசனை மாற்று மாப்பிள்ளையாக தேர்வு செய்து, குறிப்பிட்ட நேரத்தில் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து, சிதம்பரம் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக பெண் வீட்டார் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் முன்னி லையில் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுகளை ஓடிப் போன மணமகன் வீட்டார் தர, அவர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.