

கால்நடை சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற் பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளி யிட்டுள்ள அறிக்கை:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை யினர் மற்றும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மதச்சார் பற்ற தன்மையை அடியோடு அசைத்துப் பார்க்கும் நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உணவில் மக்களுக்குள்ள அடிப்படை விருப்புரிமையை தடுக்கக் கூடாது. எனவே இந்தத் தடையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
மக்கள் எதை சாப்பிட வேண்டும் என்பது குறித்து மோடியும், அமித்ஷாவும் முடிவெடுக்க முடியாது. தேவையில்லாத விஷயங்களில் மத்திய அரசு தலையிடுகிறது. இதுபோன்ற நட வடிக்கைகளால் பாஜக அரசு மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி கலாச்சாரம், உணவு முறைகள் உள்ளன. அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்வதை தடை செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தடையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
விவசாயிகளின் நலனை மிகக்கடுமை யாக பாதிக்கக்கூடிய மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத் தக்கதாகும். மேலும், இது ஒரு பிரிவினரின் உணவு உரிமையில் தலையிடும் செயலாகும். இன்றைக்கும் ஏழைகளில் பெரும்பான்மையினர் மலி வான விலையில் கிடைக்கும் மாட்டிறைச் சியை சாப்பிடும் நிலையில்தான் உள்ளனர். எனவே, தடையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:
பருவ மழை பொய்த்ததால், வேளாண் தொழில் நலிவடைந்து, விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் கால்நடைகளை சந்தை களில் விற்பனை செய்வதற்கு கடுமை யான விதிமுறைகளை கொண்டு வந்திருப்பது நியாயமானதல்ல.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:
மத்திய அரசின் இந்தத் தடையை கண்டித்து ஜூன் 1-ம் தேதி ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மே 30-ம் தேதி பெரியார் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்:
மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது என்பதைவிட ஆர்எஸ்எஸ் ஆட்சி நடக்கிறது என்பது இந்த உத்தரவு மூலம் உறுதியாகி இருக்கிறது. பசு, காளை, ஒட்டகத்தை வெட்டக்கூடாது என தடைவிதித்திருப்பது கலாச்சார தாக்குதல் மட்டுமின்றி, சிறுபான்மை யினரின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் இருக் கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்:
மத்திய அரசின் நடவடிக்கை மதச்சார்பின்மை கொள்கைக்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புக்கும் எதிரான சகிப்புத்தன்மையற்ற குரூர நடவடிக்கையாகும். எனவே, மக்கள் விரோத உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
உழைக்க இயலாத நிலையிலுள்ள மாடுகளை யும், கன்று ஈனுவதற்கு வாய்ப்பில்லாத பசுக்களையும் விவசாயிகள் விற்று வருவதை மத்திய அரசின் உத்தரவு தடுக்கும். இதனால், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளா வார்கள். எனவே, தடையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்:
நாட்டு மக்களை உணவு பழக்கத்தின் அடிப்படையில் பிரிவுபடுத்தி மோதலை உருவாக்கக்கூடிய அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
மக்கள் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மத்திய அரசு தடை விதித்துள்ளது ஏற்புடையதல்ல. எனவே, தடையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:
நாட்டு மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிடுவது, நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே, தடை உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். தமிழக அரசு இந்தத் தடை உத்தரவை அமல்படுத்த முடியாது என அறிவிக்க வேண்டும்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி:
மத்திய அரசின் அறிவிப்பை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், மதச்சார்பற்ற சமூகநீதி சக்திகளோடு இணைந்து போராட்டங் களை நடத்தவுள்ளது. மக்களின் உணர்வுகளை மதித்து தமிழக அரசும் இந்த அறிவிப்பை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன்:
மத்திய அரசின் அறிவிப்பு பலகோடி இந்தியர்கள் குறிப்பாக சிறுபான்மை இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் கொடிய பாசிசத் தாக்குதல். மக்களின் உணவு உரிமை மீது மட்டுமல்லாது கிராமப்புற விவசாயப் பொருளாதாரத்தின் மீதும் நடத்தப்படும் இத்தாக்குதல் பல லட்சம் மக்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் நாசவேலை என தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே நிஜா முதீன் உள்ளிட்டோரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்