ஜார்ஜ் டவுன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் சலுகை: கட்டிட உரிமையாளர்களை ஊக்குவிக்க சிஎம்டிஏ உத்தி

ஜார்ஜ் டவுன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் சலுகை: கட்டிட உரிமையாளர்களை ஊக்குவிக்க சிஎம்டிஏ உத்தி
Updated on
2 min read

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதி மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் கட்டிட உரிமையாளர்களுக்கு எஃப்எஸ்ஐ விதிகளில் தளர்வு வழங்கும் முடிவை சிஎம்டிஏ நிர்வாகம் எடுத்துள்ளது.

சென்னையின் முக்கிய பகுதியாக ஜார்ஜ் டவுன் திகழ்ந்து வருகிறது. ஒரே இடத்தில் அதிக அளவில் வணிக பயன்பாட்டு கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் என எந்தவித ஒழுங்கும் இல்லாமல் இப்பகுதி வேகமாக வளர்ந்துவிட்டது. சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டுமென்றால், பல விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதில் ஒன்று சாலையின் அகலம் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்பது. ஆனால் ஜார்ஜ் டவுன் பகுதியில் வாகனம் செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன.

இதனால் அவசர காலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் கூட உள்ளே செல்ல முடியாத நிலை இருக்கிறது. எனவே ஜார்ஜ் டவுன் பகுதியை மறுசீரமைக்க வேண்டும் என்ற அம்சம் சிஎம்டிஏ-வின் முழுமை திட்டங்களில் சேர்க்கப்பட்டது. அங்கு உள்ள விதி மீறல்களைக் கண்டறிய நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில் அந்த பகுதியில் இருக்கும் 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைக்கு மாறாக உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

ஜார்ஜ் டவுனில் உள்ள ஏறத்தாழ அனைத்து கட்டிடங்களும் விதிமீறல் கொண்டவை என்பதால், அனைத்தையும் விதிமுறைக்குள் கொண்டு வர முடியாமல் இருந்தது. மேலும் கட்டிடங்களை இடித்துக் கட்ட அந்தப் பகுதி வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மறுசீரமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பகுதிவாசிகளை ஊக்கப்படுத்த விதிகளில் சில தளர்வுகளை அளிக்க சிஎம்டிஏ முன்வந்துள்ளது. அதன்படி எஃப்எஸ்ஐ எனப்படும் தளபரப்பு குறியீட்டில் தளர்வு அளிக்கப்படும்.

இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது:

ஜார்ஜ் டவுன் பகுதியை ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்பு செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பகுதிவாசிகளின் ஆதரவு தேவை. மிகச்சிறிய அளவு பரப்பளவு கொண்ட நிலத்தில் அதிக உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் பகுதிவாசிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும். விதிமீறல் கட்டிடங்கள் என்பதால் பணமாக ஊக்கத்தொகை அளிக்க முடியாது. அதேவேளையில் தளபரப்பு குறியீட்டில் தளர்வு வழங்கவுள்ளோம். தளபரப்பு குறியீட்டின்படி குறிப்பிட்ட அளவு உள்ள இடத்தில் குறிப்பிட்ட உயரமுள்ள கட்டிடத்தை மட்டுமே கட்ட முடியும்.

ஒருவேளை அருகில் உள்ள நான்கைந்து கட்டிட உரிமையாளர்கள் ஒன்றாக சேர்ந்து வந்தால், பெரிய இடமாக மாறிவிடும். அப்படி வரும்பட்சத்தில் தளபரப்பு குறியீட்டில் தளர்வு அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனால் பல பெரிய நிறுவனங்கள் முன்வந்து பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு விதிப்படி புதிய கட்டிடங்களை கட்டுவார்கள். நாள டைவில் ஜார்ஜ் டவுன் நெருக்கடியில் இருந்து விடுபடும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கோப்புகள் தயாராகி வருகின்றன. விரைவில் அமலுக்கு வரும்.

ஜார்ஜ் டவுன் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலும் தேவைப்பட்டால் எஃப்எஸ்ஐ-ல் தளர்வு வழங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in