

துறைகள் வாரியான மானிய கோரிக்கைகளை நிறைவேற்று வதற்காக ஜூன் 2-வது வாரத்தில் சட்டப்பேரவையை கூட்ட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசின் 2017-18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த மார்ச் 16-ம் தேதி நிதிய மைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, மார்ச் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. அதில். பட்ஜெட் மீதான விவாதம் நடந்ததுடன், பட்ஜெட்டுக்கான ஒப்புதலும் பெறப் பட்டது. வழக்கமாக, பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் துறை வாரி யான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும். அதில், அந்தந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் பெறப்படும்.
ஆனால், இந்த ஆண்டில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டதால் மானியக் கோரிக் கைகள் மீதான விவாதம் தள்ளி வைக்கப்பட்டது. மேலும், அதிமுக வில் இரு அணிகளுக்குள் நிலவிய குழப்பங்களின் காரணமாகவும் சட்டப்பேரவையை கூட்டுவது தள்ளிப்போனது. இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இது தொடர்பாக பேரவைச் செயலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘துறைகள் தோறும் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்தத் துறைக ளுக்கு நிதி ஒதுக்க முடியும். மே இறுதியில் அல்லது ஜூன் 2-வது வாரத்துக்குள் பேரவையைக் கூட்ட வாய்ப்புள்ளது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளி யாகும்’’ என்றார்.
நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கும் வரை 3 அல்லது 6 மாதங்களுக்கு உரிய தொகையை விடுவிக்க ஒப்புதல் வழங்கப்படும். இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் இம்முறை 8 மாதங்களுக்கு உரிய தொகை ஒதுக்கத்துக்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் துறைகளில் கொள்கை விளக்கக் குறிப்புகள் தயாரிக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. சமூகநலத் துறையில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஊரக வளர்ச்சி, பொதுப்பணி உள்ளிட்ட துறைகளில் பணிகள் நடக்கின்றன’’ என்றார்.
பேரவைச் செயலர் பணிக்காலம் நீட்டிப்பு?
தற்போது தமிழக சட்டப்பேரவை செயலராக அ.மு.பி.ஜமாலுதீன் உள்ளார். இவர் கடந்த 2012-ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஜமாலுதீனுக்கு, 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கினார். இம்மாத இறுதியுடன் 5 ஆண்டு பணி நீட்டிப்பு காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு முதன்மை செயலர் அந்தஸ்தில் மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.