Published : 01 Feb 2023 07:47 PM
Last Updated : 01 Feb 2023 07:47 PM

மத்திய பட்ஜெட் 2023-24 | காப்பரேட்டுகளின் நலனுக்கானது மட்டுமே: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: "தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற மக்கள் என அனைத்து பகுதியினரும் மிகக் கடுமையான பொருளாதார மற்றும் வாழ்வாதார பிரச்சினையை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில் அவற்றை கணக்கில் கொண்டு நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஆனால், வழக்கம்போல் வெற்று பெருமையாலும் தனக்கு தானே முதுகில் தட்டிக் கொண்டும் கடந்த கால பெருமைகளை பேசிக் கொண்டிருப்பதாகவே பட்ஜெட் உள்ளது.

இந்தியா பட்டினிக் குறியீட்டில் அண்டை நாடுகளை விட மோசமான நிலையில் இருப்பது, ஊட்டச்சத்து குறைபாட்டிலும் மிக மோசமாக இருப்பதை கணக்கில் கொண்டு கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கும், உணவு பாதுகாப்பு திட்டத்திற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். நகர்ப்புறத்திற்கும் வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை விரிவுப்படுத்தியிருக்க வேண்டும்.

இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் உணவு மானியம் கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மதிய உணவு திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ. 800 கோடியும், கிராமப்புற மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டின் உண்மையான செலவை விட ரூ. 5,000 கோடி குறைவாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் ஒன்றரை கோடி பேருக்கு வேலை உறுதியளிப்பு சட்டத்தில் வேலை மறுக்கப்பட்ட போதிலும், 4500 கோடிக்கு அதிகமான தொகை கடந்த ஆண்டில் நிலுவையாக இருக்கும் நிலையிலும், ஒன்றிய அரசு இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி ஒதுக்கப்பட்ட ரூ 89,400 கோடியை விட ரூ. 29,400 கோடி குறைத்து ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. மோடியின் 2வது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் ஒதுக்கிய மிகக் குறைவான தொகை இதுவாகும்.

கரோனா பேரிடரால் மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் வெளிப்படுத்தி இருக்கும் நிலையில் அதை மேம்படுத்திட கூடுதலான தொகை ஒதுக்குவதற்கு பதிலாக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து மிகச் சொற்பமான தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்தை கணக்கில் கொண்டால் இந்த தொகை கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

கரோனா காலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரக் கட்டமைப்பு தேவையான அளவிற்கு இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கு 2 சதவிகிதம் அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதை முழுமையாக செலவு செய்யவில்லை என்பதோடு அதையே காரணமாக்கி இந்த ஆண்டு சுகாதாரத்திற்கு 2 சதவிகிதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டும் எந்தவித நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு முக்கியமான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது.இந்தியா இந்த நூற்றாண்டில் வலுமிக்க நாடாக வரும் என்பதற்கான அடிப்படையாக இளைஞர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்திற்கு மேல் உள்ள நிலையில் வேலையின்மை உச்சத்தில் உள்ள நிலையிலும், எந்தவித வேலைக்கான ஒதுக்கீடும் பட்ஜெட்டில் இல்லை.

இந்திய அரசு வேலை வாய்ப்பு அளிப்பதை கைகழுவி விட்ட நிலையில் சிறு-குறு நடுத்தர தொழில்களே உள்ளூர் அளவிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் ஆதாரமாக உள்ள நிலையில் சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் இந்த அரசால் முன்வைக்க முடியவில்லை.

ஆக்ஸ்பாம் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள பொருளாதார சமத்துவமின்மையை சுட்டிக்காட்டி அதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் அடிப்படை தேவையான உணவுப் பொருள், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் வரியை ரத்து செய்திட வேண்டும் எனவும், சில முக்கிய பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருந்தது.

மேலும், அரசுக்கு இதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் பெரும் செல்வந்தர்களுக்கு சொத்து வரியையும் மற்றும் வாரிசு சொத்து வரியையும் விதிக்க வேண்டும் எனவும், பெருநிறுவன வரியை அதிகரிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில் அவற்றைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஒன்றிய பாஜக அரசாங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என்பதற்கான அடையாளமாகும். மேலும், பல்வேறு வகைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சுமார் 35,000 கோடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தத்தில் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலை அளித்து வரும் சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் என்று இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களை பற்றி கவலைப்படாமல் காப்பரேட்டுகளின் நலனுக்காக மட்டுமே தயாரித்த பட்ஜெட் இதுவாகும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x