Published : 01 Feb 2023 07:35 PM
Last Updated : 01 Feb 2023 07:35 PM
சென்னை: "ஒன்றிய பாஜக ஆட்சி என்பது, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி உள்ளிட்ட ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவது தான் அதன் நோக்கமாக உள்ளது. நிதிநிலை அறிக்கையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதற்கான திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் 2023-24 தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒன்றிய பாஜக அரசு 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சமர்ப்பித்திருக்கிறது. இதுவே 2024 தேர்தலுக்கு முன்பாக பாஜகவின் முழுமையான பட்ஜெட்டாக இருக்க முடியும். நடைபெறவுள்ள மாநில சட்டமன்றப் பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தை திருப்திப்படுத்துவதற்காக வருமான வரம்பை உயர்த்தியிருக்கிறார். ஆனால், உள்கட்டமைப்பு வசதிகளுக்கோ, தொழில் வளர்ச்சிக்கோ, விவசாய முன்னேற்றத்திற்கோ எந்த அறிவிப்பும் இல்லாத வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது.
நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட்டின் மொத்த தொகை ஏறத்தாழ ரூபாய் 45 லட்சம் கோடி. ஆனால், ஒன்றிய அரசின் மொத்த கடன் 2014 இல் ரூபாய் 55.87 லட்சம் கோடியாக இருந்தது, 2022 இல் ரூபாய் 155.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 2.77 மடங்கு உயர்வாகும். ஒவ்வொரு இந்தியரின் தலையின் மீதும் ரூபாய் 43124 ஆக இருந்த கடன் சுமை கடந்த 9 ஆண்டுகளில் ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 373 ஆக உயர்ந்திருக்கிறது.
மேலும், நடப்பு நிதியாண்டில் ரூபாய் 12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடன் தொகைக்கான வட்டி செலுத்துவதற்காக நடப்பு நிதியாண்டில் ரூபாய் 1 லட்சத்து 39 ஆயிரத்து 320 கோடி செலவழிக்க வேண்டிய நிலையில் தான் ஒன்றிய பாஜகஅரசு உள்ளது. இதனால் முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை.
ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் இலக்கு ரூபாய் 20 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2022 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் இலக்கு ரூபாய் 16 லட்சத்து 50 ஆயிரம் கோடி. ஆனால், வழங்கப்பட்ட கடன் தொகையோ ரூபாய் 7.36 லட்சம் கோடி தான். மொத்தமுள்ள விவசாயிகள் 14.6 கோடி பேர். இதில் 7.4 கோடி பேர் தான் கடன் பெற்றிருக்கிறார்கள். இதற்கு காரணம் பெரும்பாலான விவசாயிகள் கடன் சுமையின் காரணமாக திரும்ப கடன் பெற முடியாத நிலையில் உள்ளார்கள்.
எனவே, அதிகமான கடன் இலக்கை நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதில் 50 சதவிகிதம் கூட விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. ரூபாய் 18 லட்சம் கோடி விவசாயிகளுக்கு கடன் இலக்கு என்ற அறிவிப்பு வெறும் கண் துடைப்பாகத் தான் இருக்க முடியும்.
ஒன்றிய பாஜகஅரசின் நோக்கம் குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகளை பாதுகாத்து, வளர்ப்பது தான். சமீபத்திய ஆக்ஸ்பார்ம் அறிக்கையில், இந்தியாவின் 50 சதவிகித ஏழை மக்களிடம் 3 சதவிகித செல்வங்கள் இருக்கின்றன. 5 சதவிகித பணக்காரர்களிடம் இந்தியாவின் 60 சதவிகித செல்வங்கள் இருக்கிறது. இதில் வியப்புக்குரியது என்னவென்றால், 50 சதவிகித ஏழை மக்கள் தான் ஜிஎஸ்டியில் 64 சதவிகித வரி பங்களிப்பை அளிக்கிறார்கள்.
ஆனால், இந்தியாவில் 70 முதல் 80 சதவிகித செல்வங்களை கொண்டிருக்கும் பணக்காரர்களின் ஜிஎஸ்டி பங்களிப்பு வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. கரோனா காலத்தில் 12 கோடி பேர் வேலையிழந்த நிலையில் கூட இந்தியாவில் 100 பெரும் பணக்காரர்கள் ரூபாய் 13 லட்சம் கோடி சம்பாதித்த கொடுமை பாஜக ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பர்களின் வருவாய் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே, ஒன்றிய பாஜகஆட்சி என்பது, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி உள்ளிட்ட ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவது தான் அதன் நோக்கமாக உள்ளது. நிதிநிலை அறிக்கையின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதற்கான திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை.
ஐ.நா. சபையின் வறுமைக் குறியீட்டு அறிக்கையின்படி மொத்தமுள்ள 191 நாடுகளில் இந்தியா 132-வது இடத்தில் இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் வறுமை எந்தளவிற்கு தாண்டவமாடுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால், மக்களிடையே இருக்கிற ஏழ்மையை, வறுமையை ஒழிப்பதற்கான எந்தவித செயல்திட்டங்களும் பாஜகவின் நிதிநிலை அறிக்கையில் கூறப்படாதது மிகுந்த கண்டனத்திற்குரியது" என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT