

அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியில் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை சுகேஷிடம் இருந்து டெல்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி.தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் பெண் நீதிபதி பூனம் சவுத்ரியின் செல்போனுக்கு அன்றைய தினத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தனிச் செயலாளர் அனுமந்த் பிரசாத் பேசுகிறேன். சுகேஷுக்கு நீதிமன்றக் காவல் முடிந்ததும் ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதற்கு நீதிபதி மறுக்கவே, ஜாமீன் வழங்காவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டிவிட்டு போனை துண்டித்து விட்டார்.
அதைத் தொடர்ந்து சுகேஷ் மீதான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், அதே எண்ணில் இருந்து நீதிபதி பூனம் சவுத்ரிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன. மிரட்டலுக்கு பணியாத நீதிபதி பூனம், சுகேஷின் நீதிமன்ற காவலை மே 12-ம் தேதி வரை நீட்டித்தார். பின்னர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே தொடர்பு கொண்டு பேச, அப்படி ஒரு நபரே இல்லை என்பது தெரியவந்தது. நடந்த சம்பவங்கள் குறித்து தீஸ் ஹசாரி குற்றவியல் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து ஆள் மாறாட்டம், அரசு ஊழியரை மிரட்டுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை டெல்லி போலீஸார் தேடிவருகின்றனர்.