

ரமலானுக்கு பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4 ஆயிரத்து 900 டன் அரிசி வழங்க முதல்வர் கே.பழனிசாமி அனுமதியளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க தேவையான அனுமதியை கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி, வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதன்படி, நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்குவதற்காக அனுமதியளித்து முதல்வர் கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 4 ஆயிரத்து 900 டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.12 கோடியே 60 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும்.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயனடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.