Published : 10 May 2017 06:22 PM
Last Updated : 10 May 2017 06:22 PM

வாடிக்கையாளர்களிடம் பணம் பறிக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி

வாடிக்கையாளர்களிடம் பணம் பறிக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் நவீன முறையில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஹங்கமா சேவை என்ற பெயரில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் விருப்பத்தைக் கேட்காமல், ஒப்புதலைப் பெறாமல் மாதம் தோறும் 562 ரூபாய் பணம் வசூலிப்பது வணிக அறத்துக்கு எதிரானது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதாகும்.

ஹங்கமா சேவை என்பது பிஎஸ்என்எல் இணைப்பு மூலம் வீடியோ விளையாட்டுகள், திரைப்படங்கள், இசை ஆகியவற்றை வழங்குவதாகும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை நுகர்வோர் சேவை மையத்திலிருந்து தொடர்பு கொள்ளும் அதிகாரிகள், பிஎஸ்என்எல் இணைப்பின் மூலம் வீடியோ விளையாட்டுகள் மற்றும் திரைப்படம் பார்க்கும் மதிப்பு கூட்டு சேவையை பெற விரும்புகிறீர்களா? என்று வினவுகின்றனர். தங்களுக்கு எந்த சேவையும் தேவையில்லை என்று பதிலளித்தாலும் கூட அவர்களின் இணைப்பில் ஹங்கமா சேவை வழங்கப்படுகிறது.

இன்னும் சில இடங்களில் பிஎஸ்என்எல் எண்களுக்கு தொடர்பு கொள்ளாமலேயே இச்சேவை அளிக்கப்படுகிறது. இந்த சேவை மூலம் வழங்கப்படும் திரைப்படங்களுக்காக ரூ.249, இசைக்காக ரூ.170, வீடியோ விளையாட்டுக்களுக்காக ரூ.70 என மொத்தம் 489 ரூபாயும், அத்துடன் சேவை வரியாக 73.35 ரூபாயும் சேர்த்து ரூ.562.35 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.1000 கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் அவர்களின் விருப்பமின்றி ரூ.562 கூடுதல் கட்டணம் பறிப்பது மோசடியாகும்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, தருமபுரி, சேலம் உட்பட பெரும்பாலான இடங்களில் இந்தச் சேவை கட்டாயமாக திணிக்கப்பட்டு பணம் பறிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 475 பேருக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதத்தில் 24,370 இணைப்புகளுக்கு ஹங்கமா சேவை மதிப்புக்கூட்டு சேவையாக வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 90 விழுக்காட்டினரிடம் ஒப்புதல் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது அண்டை மாநிலமான புதுச்சேரி உட்பட இந்தியா முழுவதும் இதேபோன்ற அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்தனர். ஹங்கமா சேவை தேவையில்லை என்று கூறுவோருக்கு அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை திரும்பத் தரவும் மறுக்கின்றனர். இதில் பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், ஹங்கமா சேவையை வழங்குவது தனியார் நிறுவனம் என்பதும், அந்த நிறுவனத்தின் முகவரைப் போல பிஎஸ்என்எல் செயல்பட்டு கட்டாயமாக பணம் வசூலித்துத் தருகிறது என்பதும் தான்.

பிஎஸ்என்எல் நிறுவன சேவை மனநிறைவு அளிக்காததாலும், தடையற்ற செல்பேசி சேவை வழங்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. மற்றொருபுறம் சில தனியார் நிறுவனங்கள் தரைமட்ட கட்டணத்திற்கு செல்பேசி மற்றும் அகண்ட அலைவரிசை சேவை வழங்குவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் போட்டிகளை சமாளிக்கும் வகையிலும், வாடிக்கையாளர் தளத்தை அதிகரிக்கும் வகையிலும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதுதான் புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும்.

மாறாக, வாடிக்கையாளர்களின் விருப்பமின்றி ஹங்கமா சேவையை திணித்து அதற்காக அவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் மீது வெறுப்பு ஏற்பட்டு, அவர்கள் வேறு நிறுவனங்களை நோக்கி செல்லும் நிலை உருவாகும். ஏற்கெனவே நலிவடைந்த நிலையில் உள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு எவ்வகையிலும் பயனளிக்காது.

அதிலும் குறிப்பாக ஒரு தனியார் நிறுவனத்திற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த அளவுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஹங்கமா சேவை விருப்பமற்ற வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்கு மட்டுமின்றி, பிஎஸ்என்எல் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். எனவே, வாடிக்கையாளர் மீது ஹங்கமா சேவையை திணிக்கக் கூடாது. மேலும், ஹங்கமா நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் செய்துள்ள ஒப்பந்தத்தையும் உடனே ரத்து செய்ய வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x